கோவா காங். எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜவில் சேர்ந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவா காங். எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜவில் சேர்ந்தனர்

பனாஜி: கோவா காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் 15ல் 10 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா. ஜ. வில் இணைவதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். கோவாவில் காங்கிரஸ் எம். எல். ஏக்களின் பலம் 15 ஆக இருந்தது.

இதில் 3ல் 2 பங்கு, அதாவது 10 எம். எல். ஏ. க்கள் எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் சபாநாயகர் ராஜேஷ் பட்னேகரை நேற்று மாலை 7. 30 மணிக்கு சந்தித்து மனு அளித்தனர். அதில் தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா. ஜ. வில் இணைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.   அப்போது துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

அவர்கள் நேற்று இரவே மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி விரைந்துள்ளனர்.

காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் 10 பேர் அணி மாறியதால், கோவாவில் காங்கிரஸ் கட்சியின் பலம் 5 ஆக குறைந்துள்ளது.    கோவாவில் பா. ஜ 17 எம். எல். ஏக்களுடன் தனிப் பெரும் கட்சியாக இருந்தது. தற்போது மேலும் 10 எம். எல். ஏக்கள் சேர்ந்துள்ளதால் பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது.

கோவாவில் பாஜகவின் கோவா முன்னணியில் 3 எம்எல்ஏக்களும், சுயேட்சை கட்சிகளில் 3 எம். எல். ஏ. க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), மகாராஷ்டிவாதி கோமந்த் கட்சிக்கு(எம்ஜிபி) தலா ஒரு எம். எல். ஏ. உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் மொத்தமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள்  கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், இது அரசியல் சட்ட சரத்து எண் 10ன்படி கட்சி பிளவுபட்டதாக கருதப்படும், இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை