அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி நாளை சென்னை வருகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி நாளை சென்னை வருகை

சென்னை: அத்தி வரதரை தரிசிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

வரும் 12ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 2. 10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் உடனடியாக தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்தி வரதரை தரிசனம் செய்கிறார்.

தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக குண்டு துளைக்காத காரில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

மறுநாள் சனிக்கிழமை மாலை 4. 35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா புறப்பட்டுச் செல்கிறார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வரும் 13ம் தேதி சனிக்கிழமை பகல் 12. 55 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பின்பு சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் வெங்கையா நாயுடு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பின்பு திங்கட்கிழமை 15ம் தேதி காலை 6. 45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சென்னை வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வுக்கூடத்தில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், டெல்லியில் இருந்து வந்த தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை