6491 பேரை தேர்ந்தெடுக்க குரூப் 4 தேர்வு... இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
6491 பேரை தேர்ந்தெடுக்க குரூப் 4 தேர்வு... இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை:  குரூப் 4 பதவியில் 6491 காலி பணியிடத்துக்கு இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வருகிற 14ம் தேதி கடைசி நாள் என்றும், விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3), வரி தண்டலர்(கிரேடு1), வரைவாளர் மற்றும் நில அளவர் என மொத்தம் 6491 காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு(குரூப் 4)அறிவிப்பை கடந்த மாதம் 14ம் தேதி வெளியிட்டது. வருகிற 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான அன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடக்கிறது.

நேற்று மாலை வரை இத்தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுக்கு வருகிற 16ம் தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் 14ம் தேதி இரவு 11. 59 மணி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்) ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க தேர்வாணைய இணைய தளத்தில் (www. tnpscexams. in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அவர்களின் தன்பதிவுப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டுவிட்ட பின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது.

தகவல்கள் மற்றும் பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5. 45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். மேலும் helpdesk@tnpscexams. in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிகைகளை உரிய விவரங்களுடன் அனுப்பலாம்.

இதர பொதுவான கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். contacttnpsc@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு டி. என். பி. எஸ். சி அறிவித்துள்ளது.

.

மூலக்கதை