கர்நாடக கூட்டணி அரசை காப்பாற்ற கடைசி முயற்சி: 30 அமைச்சர்கள் ராஜினாமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக கூட்டணி அரசை காப்பாற்ற கடைசி முயற்சி: 30 அமைச்சர்கள் ராஜினாமா?

பெங்களூரு: கர்நாடக மாநில மஜத-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 13 எம்எல்ஏகள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஆட்சியை காப்பாற்றி கொள்ள இறுதி கட்ட முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனிடையே சுயேச்சை எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான நாகேஷ் இன்று கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

அதேநேரத்தில் 20 காங்கிரஸ் அமைச்சர்களும் மஜதவை சேர்ந்த 9 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.   அந்த கடிதங்களை கவர்னிடம் குமாரசாமி வழங்கினார்.

கர்நாடகா மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் அடிக்கடி குழப்பம் தலைதூக்கினாலும் தலைவர்கள் சமரசம் செய்து ஆட்சியை காப்பாற்றி வருகின்றனர்.

அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு குழப்பத்திற்கு மத்தியிலும் கடந்த மாதம் நான்காவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்தி, கடந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்ற இருவரை அமைச்சரவையில் சேர்த்து கொண்டனர்.

இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மஜதவில் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பல்லாரி மாவட்டம், விஜயபுரா தொகுதி காங்கிரஸ் பேரவை உறுப்பினராக இருக்கும் ஆனந்த்சிங், அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாருக்கு கடந்த 1ம் தேதி கடிதம் அனுப்பினார். அவரை தொடர்ந்து கடந்த 6ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேரந்த ராம்லிங்காரெட்டி, பி. சி. பாட்டீல், பிரதாப்கவுடா பாட்டீல், மகேஷ்குமட்டஹள்ளி, சிவராஜ் ஹெப்பார், எஸ். டி. சோமசேகர், முனிரத்னம், பைரதிபசவராஜ், ரமேஷ்ஜாரகி ஹோளி, மஜதவை சேர்ந்த எச். விஷ்வநாத், கோபாலையா, நாராயணகவுடா ஆகிய 13 பேர் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரின் செயலாளர் விசாலாட்சியிடம் கொடுத்தனர்.

அவர்கள் கடிதத்தின் மீது ஜூலை 9ம் தேதி (நாளை) பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜினாமா செய்துள்ள இரு கட்சி எம்எல்ஏகளில் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் பாஜ தலைவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள எம்எல்ஏகளை மனமாற்றி பெங்களூரு கொண்டுவரும் முயற்சியை நீர்பாசன துறை அமைச்சர் டி. கே. சிவகுமார் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டெல்லி சென்றிருந்த முதல்வர் குமாரசாமி நேற்றிரவு பெங்களூரு திரும்பினார்.

நள்ளிரவு வரை துணைமுதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணைமுதல்வர் பரமேஷ்வர் சிற்றுண்டி விருந்து கொடுத்தார். அதில் அமைச்சர்கள், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே. சி. வேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதால் அமைச்சர்கள் சிவானந்தபாட்டீல், எம். டி. பி. நாகராஜ், துகாராம் ஆகிய மூன்று பேர் கலந்துகொள்ளவில்லை. விருந்தின் போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது காங்கிரசை சேர்ந்த 20 அமைச்சர்களும் ராஜினாமா செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதில் மூத்த அமைச்சர்களுக்குப் பதில் அதிருப்தியில் இருக்கும் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 20 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை மேலிட பிரதிநிதி வேணுகோபாலிடம் வழங்கினர். அதே சமயத்தில் பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் அவருடன் முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத அமைச்சர்கள் காலை சந்தித்து பேசினார்கள்.

இதில் கட்சி சார்பில் தற்போதுள்ள அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்து கடிதங்களை குமாரசாமியிடம் வழங்கினர். இறுதி கட்ட முயற்சியாக மும்பையில் தங்கியுள்ள மஜத எம்எல்ஏகளிடம் பேசுவதற்காக அமைச்சர்கள் எச். டி. ரேவண்ணா, சா. ரா. மகேஷ், புட்டராஜி ஆகியோரை அனுப்பி வைக்கவும் ஆலோசனையின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ், மஜத அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை கவர்னரிடம் வழங்கினார்.

இந்நிலையில் இன்று சவுமியாரெட்டி உள்பட 4 எம்எல்ஏகள் சபாநாயகர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சுயேச்சை எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான நாகேஷ் இன்று கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக்குமாரை அவசரமாக ராஜ்பவன் அழைத்த ஆளுநர் வி. ஆர். வாலா, அவருடன் சுமார் 2மணி நேரம் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கூட்டணியில் நிலவம் குழப்பம், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று பகல் பாஜ மூத்த தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார்.

.

மூலக்கதை