உலக கோப்பையில் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவு: அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பையில் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவு: அரையிறுதியில் இந்தியா  நியூசிலாந்து மோதல்

லண்டன்:  உலககோப்பை தொடரில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடைபெற்றன. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடியது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 326 ரன்களை தென் ஆப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 20 ஓவர்களில் 3 முக்கியமான விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கவாஜா காயம் காரணமாக வெளியேறினார்.

ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 122 ரன்கள் அடித்தார். அவருக்குப் பின்பு அதிரடியாக ஆட தொடங்கிய அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் சுற்றின் முடிவில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.



ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன. அதனால், அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்ற பட்டியலும் உறுதியானது.


உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் விதியின்படி முதலிடத்தில் உள்ள  இந்தியாவும், நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் முதல்  அரையிறுதியில் மோதுகின்றன. அதன்படி நாளை மறுநாள் (ஜூலை 9) மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.   இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இந்த தொடரில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



அதனால், இருநாட்டு ரசிகர்களும் மான்செஸ்டரை நோக்கி படைெயடுத்து வருகின்றனர். தொடர்ந்து 11ம் தேதி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.   இந்த அரையிறுதி போட்டியில் வெல்லும் அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

அதில் வெல்லும் அணி உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும். கடந்த மே 20ம் தேதி தொடங்கி 45 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அவை நேற்றுடன் முடிவடைந்தன.

உலககோப்பையை கைப்பற்றுவது யார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் நாளை மறுநாள் மற்றும் 11ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளன.

.

மூலக்கதை