அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்கி 7ந் தேதி வரை நடக்கிறது

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில், 10-வது உலகத் தமிழ் மாநாடு, இன்று  (ஜூலை 4-ந்தேதி) தொடங்கி வரும் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.உலகத் தமிழ் மாநாடு என்பது உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழா்களையும் ஒன்று சோ்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.


தமிழ் மற்றும் தமிழாின் பெருமையை உலகில் உள்ள அனைவரும் அறியச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதுவரை 9 உலகத்தமிழ் மாநாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளன.

1966- ம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவிலும், 2-ம் உலகத் தமிழ் மாநாடு 1968-ம் ஆண்டு  சென்னையிலும், 3-ம் உலகத்தமிழ் மாநாடு 1970- ம் ஆண்டு பாரீசிலும், 4-ம் உலகத்தமிழ் மாநாடு 1974 -ம் ஆண்டு  இலங்கையிலும், 5- ம் உலகத் தமிழ் மாநாடு 1981 - ம் ஆண்டு மதுரையிலும்,  6-ம் உலகத்தமிழ் மாநாடு 1987-ம் ஆண்டு மலேசியாவிலும், 7-ம் உலகத் தமிழ் மாநாடு 1989-ம் ஆண்டு மொரீசியசிலும், 8-ம் உலகத் தமிழ் மாநாடு  1995- ம் ஆண்டு தஞ்சாவூரிலும், 9-ம் உலகத் தமிழ் மாநாடு 2015-ம் ஆண்டு மலேசியாவிலும் நடந்துள்ளது.

இவை தவிர, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, 2010-ம் ஆண்டு கோவையில் நடந்து உள்ளது.

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து 10-வது உலகத்தமிழ் மாநாட்டை சிகாகோவில் நடத்த முடிவெடுத்தது.

இந்த 10- வது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய ஜனாதிபதி மற்றும் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. இருவருமே கலந்து கொள்ள முடியாததால் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொள்கிறார். 

தமிழக அரசின் சார்பில் 20 தமிழறிஞர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு, தமிழக அரசு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். 

உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, இங்கிலாந்து, மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா... போன்ற பல நாடுகளிலும் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை 2 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளன.  இதில் இருந்து 80 கட்டுரைகள் தேர்வாகி இருப்பதோடு, அவை மாநாட்டில் வாசிக்கப்படுவதோடு, புத்தகமாகவும் உருவாக இருக்கிறது.

உலகில் 6 ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அவற்றில் கிரேக்கம், லத்தீன், எபிரேபியம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவையே செம்மொழி என்னும் தகுதி பெறும் மொழிகளாகத் திகழ்கின்றன. 

குறைந்தபட்சம் 2 ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியம் கொண்டு, இலக்கணம், இலக்கியம், கலை சொல்லும் நுட்பங்கள் ஆகியவை கொண்ட மொழி மேன்மொழி எனப்படுகிறது.  இந்த தகுதிகளோடு தற்போதும் கூட அழிந்து போகாமல் புழக்கத்தில் இருக்கும் தகுதி கொண்டதாக தமிழ் விளங்குகிறது.

நவீன மொழி ஆய்வுகள், தொல்லியல் ஆய்வுகள், சிற்பம், கட்டிடக் கலை, அறிவியல் சார்ந்த ஒப்பீடுகள் ஆகியவை குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படும். அதுவும் சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள், அதில் கிடைத்த 13,638 பழம் பொருட்கள், குறிப்பாக இவை, தமிழ் தொன்மையைப் பிரதிபலிப்பதால், மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

முக்கியமாக தொன்மை தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் நவீன தமிழ் மற்றும் தமிழ் கலாசாரத்திற்குமான இணைப்புப் பாலமாக உலகத் தமிழ் மாநாடுகள் திகழ்கின்றன.
அமெரிக்காவில் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். பலர் அங்கு மக்கள் பிரதிநிதிகளாகவும்  உள்ளனர்.

உலக அளவில் அறியப்பட்ட, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஒ. இந்திரா நூயி, நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், பிரபல அறிவியல் மேதை ஸ்ரீநிவாச வரதன் போன்ற  பல தமிழர்கள் அமெரிக்காவில் புகழ்க் கொடி நாட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதன் செய்தி தொடர்பாளரும், வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பார்த்தசாரதி கூறியதாவது:  “அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். 

இங்கே உள்ள 50 மாவட்டங்களில் 240 தமிழ் பள்ளிக்கூடங்களை நாங்கள் நடத்துகிறோம். அரசே, சுமார் 8 மாவட்டங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்பிக்க உதவுகிறது.

நாங்கள் ஒவ்வொருவரும் சாப்ட்வேர், மருத்துவம், பொறியியல், வியாபாரம் என பல துறைகளில் உள்ளோம். ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ் சங்கங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்து தான் இந்த தமிழ் மாநாட்டை நடத்துகின்றன. நாங்கள் 500 பேர் சுமார் ஆறு மாதங்களாக இந்த உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டு கடுமையாக பாடுபட்டு வருகிறோம். இதன் மூலம் தமிழ் வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அத்துடன் தாயகத் தமிழர்கள் உடனான எங்கள் நெருக்கம் மறுபுறமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.”இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இருந்து பேராசிரியர் சாலமன் பாப்பையா, சாகித்ய அகாடமி பரிசு பெற்றவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், சீர்காழி சிவசிதம்பரம், ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்டு தலைவரும் எழுத்தாளருமான சி.மகேந்திரன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா, ஜேம்ஸ் வசந்தன், ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர் சீனிவாசன், நாட்டுப்புற கலைஞர்கள் ராஜலட்சுமி, கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன், விடியன் நாதஸ்வரம், கவிஞர் சல்மா, கல்வியாளர் பொன்னவைக்கோ, இயக்குனர் கரு.பழனியப்பன், மணி அருணாச்சலம், பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட சுமார் 250 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

சிகாகோவின் சாம்பர்க் கன்வர்ஷன் மையத்தில் இன்று (4-ந்தேதி) தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொரிஷியஸ் செயல் குடியரசுத் தலைவர் பரமசிவம் வையாபுரிபிள்ளை, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.


‘கீழடி நம் தாய்மடி’ என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வரங்கம் நடக்கிறது. குறள்தேனீ, தமிழ்தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்படப் போட்டி, கங்கை கொண்ட சோழன் நாட்டிய நாடகம், இலக்கிய வினாடி வினா, கவியரங்கம், யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெறுகின்றன. 


சொற்குவை என்ற பெயரில் தமிழ் சொற்கள் அனைத்தையும் தொகுத்து, வரிசைப்படுத்தி இலக்கண வகைகளை பதிவு செய்து இணைய பயன்பாட்டுக்கு தர உள்ளனர்.
50- க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள். 32-க்கும் மேற்பட்ட இணையமர்வுகள், 160 மணி நேரத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய நிகழ்வுகள் இம் மாநாட்டில் நடக்க உள்ளன. 


ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை சிம்பனி, இயற்கையில் பிறந்த தமிழ் இசை பெரும் நாட்டிய நாடகம், நாட்டுப்புற இசை, தமிழ் பாரம்பரிய பெருவிருந்து ஆகியவை மாநாட்டின் சிறப்பு அம்சங்களாகும்!


சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தையும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஏற்று உள்ளார். 


ஜூலை 6 மற்றும் 7-ந்தேதிகளில் தமிழர்களின் வணிக பொருளாதாரம் தொடர்பான மாநாடும் நடக்கவிருக்கிறது. மொத்தத்தில் இந்த மாநாட்டிற்கான செலவு சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை ஆகலாம் என கூறப்படுகிறது

 

மூலக்கதை