ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

ஒசாகா: ஜப்பானில் உள்ள ஒசாகாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார். அவருக்கு ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இரண்டு நாட்கள் நடக்கும் ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இருநாட்டு வர்த்தகம் குறித்து பேச உள்ளனர்.   ஜி20 என்னும் தொகுப்பில் அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த ஜி20 நாடுகளுக்கான மாநாடு இந்த ஆண்டு ஜப்பானின் ஒசாகாவில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி இன்று காலை ஜப்பான் சென்று சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய கூட்டங்களில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

குறிப்பாக மோடியும், ட்ரம்ப்பும் சந்திக்கும் கூட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தம் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபோது தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியை நாளை சந்திக்க உள்ளார்.

 ஜி20 மாநாடு நடக்கும் நாள் மற்றும் அதற்கடுத்த நாட்களில் 10 நாடுகளுடன் நடக்கும் இரு நாடுகளுக்கிடையேயான சந்திப்புகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை ஒசாகாவில் வாழும் இந்தியர்கள் சிறப்பாக வரவேற்று உபசரித்ததாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஜப்பான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்படுவதற்கு முன்னதாக நேற்று முன்தினம்  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ டெல்லி வந்தார்.

அங்கு அவர் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.   இந்நிலையில், ஜப்பானில் நடக்கும் ஜி20 மாநாட்டில் இந்தியா பங்கேற்பதின் மூலம், வரும் 2022ம் ஆண்டில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டுக்கு இது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும், இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் புதிய இந்தியா உருவாவதற்கான ஒரு இடத்தை இந்த மாநாடு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பல்வேறு சவால்கள், பிரச்னைகள் தான் முக்கியமாக பேசப்பட உள்ளன.

குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள், சுற்றுலாத்துறையில் உள்ள சாவல்கள் போன்றவை முக்கிய இடம் பெற உள்ளன. மேலும், மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி தற்போது 6வது முறையாக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ரஷ்யா-இந்தியா-சீனா மற்றும் ஜப்பான்-அமெரிக்கா-இந்தியா என்ற அளவில் இருநாடுகளுக்கு இடையேயான சந்திப்பில் பிரிக்ஸ் தலைவர்களை சந்திக்கிறார்.   மாநாட்டின் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப, வர்த்தகம் தொடர்பாக சீனாவின் ஜி ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக 9 நாடுகளுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதில் ரஷ்ய அதிபர் விலாடிமர் புடினுடன் நாளை சந்திக்க உள்ள நிகழ்வும் அடங்கும்.

.

மூலக்கதை