சிக்கல்! கடலூரில் சுத்தமான குடிநீர் வழங்க...செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்

தினமலர்  தினமலர்
சிக்கல்! கடலூரில் சுத்தமான குடிநீர் வழங்க...செயல்படாத சுத்திகரிப்பு நிலையம்

கடலுார்:கேப்பர் மலையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல் படாததால், சுத்தமான தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலுார் நகராட்சி, கடந்த 1866ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. கடந்த 1993ல், தேர்வுநிலை நகராட்சியாகவும், 2008ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது பெரு நகராட்சியாக உயர்ந்துள்ளது.நகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.73 லட்சம் பேர் உள்ளனர். நகராட்சி சார்பில் இதுவரை 11 ஆயிரத்து 759 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. 44 ஆயிரத்து 152 குடியிருப்புகள் வரிவிதிப்பில் உள்ளது.நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக தென்பெண்ணை ஆற்றில் போர்வெல் போடப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆற்றில் கடல் நீர் உட்புகுந்ததால் போர்வெல் தண்ணீர் குடிக்க லாயக்கற்றதாக மாறியது. இதனால், கடலுார் நகராட்சியில் குடிநீர் பிரச்னை தலை துாக்கியது.18 கோடி செலவில் குடிநீர் திட்டம்குடிநீர் பிரச்னையை சமாளிக்க கேப்பர் மலையில் உள்ள கொண்டங்கி ஏரியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் 18 போர்வெல்கள் போடப்பட்டு, நீரேற்று நிலையம் அமைத்து, அதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.பெரும்பாலான போர்களில் தண்ணீர் இரும்பு தன்மை அதிகமாக இருந்ததால், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 7 முதல் 10 ரூபாய் வரை விற்கின்றனர்.இதற்கிடையே திருவந்திபுரத்தில் போர்வெல் அமைக்கப்பட்டு, இரண்டாவது நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இந்த தண்ணீரிலும் இரும்பு தன்மை அதிகமாக இருந்தது.இதன் காரணமாக தண்ணீரை சுத்தம் செய்து, வழங்குவதற்காக சுனாமி நிவாரண நிதி 29.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீரை சுத்தம் செய்ய தொட்டிகள் அமைக்கப்பட்டது. 12 லட்சம் ரூபாய் செலவில் பில்டர் அமைத்து, அதன் மேல் ஆற்று மணலை கொட்டி, அதில் தண்ணீரை விட்டு, சுத்தம் செய்து, குடிநீர் விநியோகம் செய்தனர். இதில் ஓரளவு பலன் கிடைத்தது.கூட்டுக் குடிநீர் திட்டம்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கடலுாருக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் சுத்தமாக இருந்தாலும், அதனை கேப்பர் மலை தண்ணீருடன் கலந்தே வழங்கி வருவதால், பழையபடி பழுப்பு நிறமாக வருகிறது. இதனை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே கேப்பர் மலையில் தண்ணீர் இரும்பு தன்மை அதிகளவு உள்ளதால் தண்ணீரை சுத்தம் செய்து வடிகட்டுவதற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தண்ணீரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மணலை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்.தற்போது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட தொட்டிகளில் நிரப்ப மணல் இன்றி சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது.
1.70 கோடி லிட்டர் தண்ணீர்
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் தொட்டிகளில் மணல் கொட்டப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, தண்ணீர் சுத்தமாக வழங்கப்படும்' என்றனர்.கடலுார் நகராட்சி தினசரி 1 கோடியே 70 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்தாமல், கடலுார் நகரின் 90 சதவீம் பேர் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் போர்வெல் மற்றும் டேங்கர் லாரி தண்ணீரையை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.

மூலக்கதை