'தடுக்க வேண்டும்!' நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்வதை ... கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு

தினமலர்  தினமலர்
தடுக்க வேண்டும்! நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்வதை ... கூட்டத்தில் விவசாயிகள் கொந்தளிப்பு

திருப்பூர் : மூன்றாவது திட்டத்தில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும், நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பது தடுக்கப்படவில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., செண்பகவல்லி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சிவக்குமார் மற்றும் தாசில்தார்கள் முன்னிலை வகித்தனர்.மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி வரும் அரசுத்துறையினர், நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தினர்.

பி.ஏ.பி., மங்கலம் பாசன சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமி, நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க தலைவர் துரைசாமி, கொங்கு இளைஞர் பேரவை மாநநகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

தமிழக அரசு, குடிமராமத்து பணிகளுக்கு மீண்டும் நிதி ஒதுக்கியுள்ளது. பல்லடம் விரிவாக்க பி.ஏ.பி., பாசன பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகின்றன. பொங்கலுாரில் இருந்து வரும், வாய்க்கால் மண் மேவியுள்ளதால், துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் பணிகளை செய்ய, நிதி ஒதுக்க வேண்டும். எம்.செட்டிபாளையம் வழியாக, சின்னாண்டிபாளையம் வந்துசெல்லும் ஓடையில், மழைநீர் வீணாக நொய்யலில் கலக்கிறது.

எனவே, சின்னாண்டிபாளையம் பகுதியில், நான்கு இடங்களில் தடுப்பணை அமைத்தால், மழைநீரை தேக்கி வைக்கலாம்.மழை குறைவாக பெய்துள்ளதால், நிலத்தடி நீரை எடுத்து, விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூர், பல்லடம் சுற்றுப்பகுதிகளில், விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து, தினமும் லாரிகளுக்கு தண்ணீர் விற்கப்படுகிறது.மூன்றாவது திட்டத்தில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும், நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பது தடுக்கப்படவில்லை. இதேநிலை நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் குறையும். எனவே, முறைகேடாக தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

மங்கலம், வேட்டுவபாளையம் குளத்துக்கு, நொய்யல் தண்ணீரை எடுத்துவர மேற்கு ரோட்டரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் திட்டமிட்டனர். பொதுப்பணித்துறை அனுமதி வழங்கினால், எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில், குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க இயலும். மேலும், குளம், குட்டை துார்வாருதல் உள்ளிட்ட பொது பணிகளுக்கு, மேற்கு ரோட்டரி 'பொக்லைன்' வாங்கி இயக்குகிறது.மாவட்ட நிர்வாகம், இந்த சேவையை பயன்படுத்தி, குளம், குட்டைகளை துார்வாரி சுத்தம் செய்ய திட்டமிட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆர்.டி.ஓ., பேசுகையில், ''தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகளை அழைத்து பேசி, நிலத்தடி நீர் விற்பனையை முறைப்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், விவசாயிகள் திட்டமிட வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை