உயிர் பெறும் கவுசிகா!

தினமலர்  தினமலர்
உயிர் பெறும் கவுசிகா!

கோவை, : வறண்டு கிடந்த கவுசிகா நதிக்கு உயிரூட்டும் திட்டம், கோவை மாவட்டத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் பயனாக, இன்னும் மூன்றாண்டு காலத்தில், கவுசிகா நதியில் நீரோட்டம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கவுசிகா நதி, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னுார், சூலுார் வட்டாரங்களில் 52 கி.மீ., பாய்ந்து, திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 1977ம் ஆண்டு வரை, ஆற்றில் ஆண்டுக்கு 9 மாதம் வரை, நீரோட்டம் இருந்தது.காலப்போக்கில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து, முற்றிலும் நின்று விட்டது.

40 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால், கவுசிகா நதி, உயிர்த்தன்மை இல்லாததாக மாறி விட்டது. இந்த பின்னணியில், ஆற்றை உயிர்ப்பிக்கும் பணியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அரசு துவக்கியது.ஆற்றுப்படுகையில், ஆய்வு நடத்தி, பணி செய்வதற்கான, 747 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. 15 அடி நீளம், 20 அடி ஆழம், 6 அடி அகலத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

அதன் மேற்பகுதியில், 'போல்டர் செக்டேம்' அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு பணி நிறைவு பெற்ற கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர். அரசு துறையினரின் ஆய்வும் அதை உறுதி செய்துள்ளது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறியதாவது:கவுசிகா நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாக, கலெக்டர் ராஜாமணியின் அறிவுறுத்தலின்படி, 747 திட்டப்பணிகள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வாழும் கலை இயக்கத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் பணி நடக்கின்றன.
இதன் பயனாக, கவுசிகா நதிப்படுகை கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ''அன்னுார், குப்பேபாளையத்தில், 2017 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், நிலத்தடி நீர் மட்டம், இப்போது 121 அடி அதிகரித்துள்ளது. வரும் மார்ச்சில் கவுசிகா நதிக்கு உயிரூட்டும் பணி முடியும். தொடர்ந்து சராசரி மழை பெய்தாலே, 3 ஆண்டில் கவுசிகா நதியில் தண்ணீர் ஓடும். 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு 6 மாத காலம் வரை நீரோட்டம் இருக்கும்.

இவ்வாறு, ரூபன் சங்கர்ராஜ் கூறினார்.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து, முற்றிலும் நின்று விட்டது. 40 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால், கவுசிகா நதி, உயிர்த்தன்மை இல்லாததாக மாறி விட்டது. இந்த பின்னணியில், ஆற்றை உயிர்ப்பிக்கும் பணியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அரசு துவக்கியது.

மூலக்கதை