பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்

தினகரன்  தினகரன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்: ஆன்டிகுவா பிரதமர் தகவல்

ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கி யில் 13,400 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டு தனது நாட்டில் தங்கியுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாக ஆன்டிகுவா பிரதமர் அறிவித்துள்ளார்.   இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி, அவரது உறவினர் நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,400 கோடி மோசடி செய்து விட்டு இருவரும் வெளிநாடு தப்பி விட்டனர். நீரவ் மோடி லண்டனில் தங்கியுள்ளார். ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்று சோக்‌ஷி  அங்கு தங்கியுள்ளார். இவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர, அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து, ஆன்டிகுவா அரசுகளுக்கு இவை கடிதம் எழுதியுள்ளன.இந்நிலையில், ஆன்டிகுவா பிரதமர் கேஷ்டன் பிரவுன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்‌ஷியின் குடியுரிமை ரத்து செய்யப்படும். அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். அதே நேரத்தில் குற்றவாளிகளுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளதால் சோக்‌ஷி நீதிமன்றம் சென்று தனது நிலையை விளக்க கடமைப்பட்டுள்ளார். எனவே, சட்ட ரீதியான கடமைகள் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்,’’ என்றார்.உடல்நிலை அறிக்கைகேட்கிறது உயர் நீதிமன்றம்பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பியோடிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மெகுல் சோக்‌ஷி தற்போது ஆண்டிகுவா நாட்டில் இருக்கிறார். தனது உடல்நிலை சரியில்லாததால் இந்தியாவுக்கு பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெகுல் சோக்‌ஷியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் ஜெ.ஜெ. மருத்துவமனையின் இருதய நோய் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவிடம் கொடுக்கும்படி அவருடைய வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெ.ஜெ. மருத்துவமனை டாக்டர்கள் குழு, இந்த அறிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, மெகுல் சோக்‌ஷியால் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடியுமா என்பது குறித்த தனது கருத்தை சீலிட்ட கவரில் வைத்து ஜூலை 9ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

மூலக்கதை