வங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தினரை ஊடுருவச் செய்து மே.வங்கதேசத்தை உருவாக்க மம்தா முயற்சி: பாஜ எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: வங்கதேசத்தினரை மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவ அனுமதிப்பதன் மூலம் `மேற்கு வங்கதேசத்தை உருவாக்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின், 17ம் மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, 20 தேதி நடந்த கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முத்தலாக் சட்டம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 9-ம் நாளான நேற்று, மேற்கு வங்க பாஜ உறுப்பினர் திலீப் கோஷ் மக்களவையில் பேசிய போது, ``மேற்கு வங்க முதல்வர் நாட்டின் பிரதமராக விரும்புகிறார். மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தையும் இணைத்து மேற்கு வங்கதேசத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வங்கதேசத்தினரை ஊடுருவ அனுமதிக்கிறார். மேற்கு வங்கத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான சதி நடக்கிறது. ஜெய் ராம் என்ற முழக்கத்தை அரசியலாக்கக் கூடாது. ராமர் தான் நீதி, சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை கற்பித்தவர். ஜெய் பங்களா என்பது வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோஷமாகும். ஜெய் ராம் என்பது நமது சொந்த முழக்கம்,’’ என்றார்.மேலும் அவர் பேசுகையில், ``பொதுத்தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் மட்டுமே அதிகளவு வன்முறை ஏற்பட்டது. மேற்கு வங்கத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் பெங்காலி கற்று கொள்ள வேண்டும் என்று அரசு கூறி வருகிறது’’ என்று கூறினார்.இதற்கு மறுப்பு தெரிவித்து திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா கூறிய போது, ``பாஜ அரசு கடந்த 2014ல் பதவிக்கு வந்ததில் இருந்து 2.77 ஏக்கர் அயோத்தி பிரச்னையை அரசியலாக்கி நாட்டையும் அரசியலமைப்பையும் அச்சுறுத்தி வருகிறது. மதத்தையும் குடியுரிமையையும் பாஜ குழப்பி வருகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் குறிப்பிட்ட சிறுபான்மையினர் சமூகம் குறி வைக்கப்படுகிறது. பள்ளி பாடப் புத்தகங்களும் மாணவர்களுக்கு இதனை போதிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாடு துண்டாடப்படுவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை