சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியீடு: 3-லிருந்து 9-வது இடத்திற்கு பின்தங்கியது தமிழகம்

தினகரன்  தினகரன்
சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியீடு: 3லிருந்து 9வது இடத்திற்கு பின்தங்கியது தமிழகம்

புதுடெல்லி: சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3-வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு  பின்தங்கியது. இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர்  நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். உலக வங்கி உதவியுடன், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளின் துணையுடன், நாடு முழுவதும்  மக்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, உடல்நலம் பேணும் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நிதி ஆயோக் ஆய்வு செய்து, 2-வது  சுகாதாரக் குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.அதில், கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்தாண்டு 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்தில் சிறந்த தரவரிசையில் கேரள  மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, மகாராஷ்ரா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. ஹரியானா,  ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் சுகாதாரத்தை அதிகரித்தப் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் மிக பெரிய மாநிலம்  உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் உள்ள மாநிலங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுகாதாரக் குறியீடு வெளியீடு:  பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு  மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் இருந்தன. இந்த பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடைசி இடமே கிடைத்தது.  ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முறையே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு முந்தைய இடங்களில் இருந்தன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது  இடத்திலும் இருந்தது.

மூலக்கதை