சதம் விளாசினார் பின்ச் : இங்கிலாந்து அணிக்கு 286 ரன் இலக்கு

தினமலர்  தினமலர்
சதம் விளாசினார் பின்ச் : இங்கிலாந்து அணிக்கு 286 ரன் இலக்கு

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், சதம் விளாசி அசத்தினார்.


இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜாம்பா, கூல்டர் நைல் நீக்கப்பட்டு நாதன் லியான், பெஹ்ரன்டர்ப் சேர்க்கப்பட்டனர்.



சூப்பர் துவக்கம்



ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. பின்ச் 25வது, வார்னர் 20வது அரைசதம் எட்டினர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த போது, மொயீன் அலி சுழலில் வார்னர் (53) சிக்கினார். கவாஜா 23 ரன்னுக்கு போல்டானார்.சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பின்ச், ஒருநாள் அரங்கில் 15வது சதம் எட்டினார். இந்த உலக கோப்பை தொடரில் பின்ச் அடித்த இரண்டாவது சதம் இது. இம்மகிழ்ச்சியில் இருந்த பின்ச் (100), அடுத்த பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு அவுட்டானார்.

மேக்ஸ்வெல் ஏமாற்றம்



ஸ்மித், மேக்ஸ்வெல் இணைந்தனர். உட் ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஆர்ச்சர் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார் மேக்ஸ்வெல். இவர் 12 ரன்னுக்கு உட் வீசிய 'ஷார்ட் பிட்ச்' பந்தில் அவுட்டானார். ஸ்டாய்னிஸ் (8) வீணாக ரன் அவுட்டானார்.கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர வழியில்லாமல் போனது. தடுமாறிய ஸ்மித் 38 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் (1) கைவிட்டார். கடைசி ஓவரில் கேரி 11 ரன்கள் எடுத்து உதவினார்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. கேரி (38), ஸ்டார்க் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை