சிரஞ்சீவியின் 'சை ரா' படப்பிடிப்பு நிறைவு

தினமலர்  தினமலர்
சிரஞ்சீவியின் சை ரா படப்பிடிப்பு நிறைவு

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, அரசியலில் இறங்கியதற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். சில வருட அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவுக்குள் வந்தார்.

தமிழில் வெளிவந்த 'கத்தி' படத்தை தெலுங்கில் 'கைதி நம்பர் 150' என ரீமேக் செய்து பெரிய வெற்றியைப் பெற்றார். அடுத்து சரித்திரப் படமான 'சை ரா' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமானது. சுமார் ஒன்றரை வருட காலங்களாக நடந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

விஜய் சேதுபதி, சுதீப் ஆகியோருடன் ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் விடுபட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பை நேற்றுடன் நடத்தி முடித்துள்ளார்கள். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அமித் திரிவேதி இசையமைக்கும் இந்தப் படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. தற்போது இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மூலக்கதை