மீஞ்சூர் அருகே பரபரப்பு கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய் உடைப்பு; மின் கேபிள் தீ வைப்பு: 50 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீஞ்சூர் அருகே பரபரப்பு கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய் உடைப்பு; மின் கேபிள் தீ வைப்பு: 50 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய்களை மர்ம நபர்கள் உடைத்து, மின் கேபிளை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் 50 கிராமங்கள் குடிநீரின்றி தவிக்கிறது. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டத்தால் மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கத்தில் கொசஸ்தலை ஆற்றுப்படுகை உள்ளது.

இங்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, பைப் லைன் மூலம் ஊராட்சி வாரியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

13 ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளுக்கும், 4 ஆழ்துளை குழாய்களில் இருந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கும் இந்த குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய்களை உடைத்து பைப்புகளையும் இணைப்பு வால்வுகளையும் திருடி சென்றுள்ளனர்.

மேலும் மின் இணைப்பு கேபிள்களை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு பொதுமக்கள் சேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் மீஞ்சூரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆய்வு செய்தார்.

பின்னர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

.

மூலக்கதை