கனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்!

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங், கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவர், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர்.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. ஆனால் ஐபிஎல்லில் ஆடிவந்தார்.

ஐபிஎல்லிலும் அவருக்கு முன்பைப்போல் பெரிய டிமாண்ட் இல்லாததால் தற்போது சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில், கனடா டி20 லீக்கில் யுவராஜ் ஆடவுள்ளார்.

ஓய்வுபெற்ற பிறகு வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட அனுமதி கோரி பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், பிசிசிஐயையும் அவருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து கனடா டி20 லீக்கில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலமும் உள்ளார். டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.



எனவே யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை கனடா டி20 லீக்கில் பார்க்கலாம். இதுதொடர்பாக யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கனடா டி20 லீக்கில் ஆடுவதற்கு ஆவலாக உள்ளேன்.

கனடா டி20 லீக் தொடரின் கடந்த சீசன் என்னை மிகவும் கவர்ந்தது. லோக்கல் கனடா வீரர்களுடனும் சர்வதேச வீரர்களுடனும் ஆட ஆர்வமாக உள்ளேன்.

எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

.

மூலக்கதை