ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: பணியில் செயல்திறன்  இல்லாத ஊழியர்கள், ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு  முடிவு செய்துள்ளதால், ரயில்வேயில் மட்டும் 3 லட்சம் பேருக்கு வேலை பறிபோகிறது. அனைத்து அமைச்சகத்திலும் அதிகாரிகள் களையெடுப்பு நடக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரிகள் பட்டியலை தயாரிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணித் தகுதியை ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய பணியாளர், பொது குறைபாடு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் கடந்த 20ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து ஏ, பி மற்றும் சி பிரிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.

அடிப்படை விதிகள் 1972 பிரிவு 56 (ஜெ)யின்  கீழ் நிர்வாகத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிமுறைகளுக்கு 2014, 2015, 2017ம் ஆண்டுகளில் வெளிவந்த உத்தரவுகளைப் பின்பற்றவேண்டும். அதன்படி, 30 ஆண்டுகள் பணிமுடித்த அல்லது 56 வயதானவர்கள், பணித்தகுதி இல்லாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 3 மாதங்கள் கழித்தோ அல்லது 3 மாத ஊதியம் மற்றும் படிகள் கொடுத்து உடனடியாகவோ கட்டாய பணி ஓய்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய ரயில்வேயில் மட்டும் சுமார் 3 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் கட்டாய ஓய்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.



கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 12 இந்திய வருவாய் பணியில் பணியாற்றி வந்த மூத்த உயரதிகாரிகள், அவர்களது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு அவர்களின் பணித்தகுதி மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள், வழக்குகள் அடிப்படையாக கொண்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை மட்டுமின்றி, செயல்திறன்  இல்லாத ஊழியர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.   மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாதிரியான திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 21ம் தேதி ஒரு புதிய சுற்றறிக்கையை காவல் துறைக்கு அனுப்பி உள்ளார்.

அதில், ‘கடந்த மார்ச் 31ம் தேதி, 50 வயது முடிந்த போலீஸ் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஜிபி, எஸ்பி மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ள காவல் அதிகாரிகளில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்காதவர்கள் அடங்கிய பட்டியலை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.   மேலும், ‘பிரிவு 56வது விதியின்படி, 50 வயதை கடந்த பணியில் ஒழுங்கில்லாத காவல் அதிகாரிகளுக்கு பணி ஓய்வினை அரசாங்கமே வழங்கலாம்’ என்ற திட்டத்தின்படி, பணித்தகுதி, அவர்கள் மீதான தனிப்பட்ட புகார்கள், வழக்குகள் விபரத்தை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   இந்நிலையில், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு மத்திய அரசு, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணி பதிவேடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அடிப்படை விதிகள் கூறுகின்றன.

ஒருவரின் நேர்மை சந்தேகத்துக்குரியதாகவோ, செயல்பாடுகள் திறமைக்குறைவாகவோ இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை பொதுநலன் கருதி, கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசுக்கு இந்த விதிகள் அனுமதி அளிக்கின்றன. எனவே, இந்த பதிவேடுகளை ஆய்வு செய்து, மாதந்தோறும் 15ம் தேதிக்குள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

பொதுநலன் கருதி, ஒரு ஊழியரை கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான பரிந்துரைகளை செய்வதில் உரிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை