ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ் சக்சேனா வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு இன்று விசாரணை

தினகரன்  தினகரன்
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: ராஜிவ் சக்சேனா வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு இன்று விசாரணை

டெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான, ராஜிவ் சக்சேனா, சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 3,600 கோடிக்கு  ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 350 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது. இது தொடர்பாக அரபு நாட்டில் தங்கியிருந்த இடைத்தரகர்  ராஜிவ் சக்சேனாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கும் படி சக்சேனா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இதை விசாரித்த, உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல, சக்சேனாவுக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து அமலாக்க துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வருகிறது.

மூலக்கதை