மழை நீர்... இயற்கையின் வரப்பிரசாதம்: மறந்து விட்டார்கள் மகத்தான அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
மழை நீர்... இயற்கையின் வரப்பிரசாதம்: மறந்து விட்டார்கள் மகத்தான அதிகாரிகள்

தலைநகர் சென்னை துவங்கி, பல பகுதிகளில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், கிடைக்கும் மழை நீரை வீணடித்து, கோடை காலங்களில் குடிநீருக்கு அலைமோதும் அவலநிலையும் நீடிக்கிறது.முன்னோர்கள், குளம், குட்டை அமைத்து, மழைநீரை சேமித்த நிலையில், அவற்றை ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றியதோடு, திட, திரவ கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றிவிட்டோம்.
இதன் விளைவால், தற்போது குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 2001ல், அரசு அலுவலகங்கள், வீடுகள், வணிக வளாகங்களில், கட்டாயம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.மழை நீரை குழாய்கள் மூலம், நிலத்தில் தொட்டி கட்டி, கல், மணல் ஆகியவற்றை பரப்பி, முழுமையாக நிலத்திற்குள் சேமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இத்திட்டங்களை அமல்படுத்தும் பணியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியும் அரசு துறைகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி, முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அரசு அலுவலகங்களிலேயே, அந்த திட்டம் சிதைந்து சின்னாபின்னமாகி காட்சியளிக்கிறது.நீர் மேலாண்மை மேற்கொள்ளும், உடுமலை பொதுப்பணித்துறை,பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஏராளமான கட்டடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது அவை முழுவதும் அழிந்துள்ளது.
வீடுகள், வணிக வளாகங்கள் கட்டும் போது, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதை உறுதிப்படுத்தி, அனுமதியளிக்கும் உடுமலை நகராட்சி அலுவலகத்தில், பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டியில், எழுதப்பட்ட அறிவிப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது; குழாய், தொட்டிகள் பராமரிப்பின்றி சீர்குலைந்துள்ளது. புதிய அலுவலக கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பே அமைக்கப்படவில்லை.
அதே போல், கிராமங்களை நிர்வகிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மழை நீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீர் சேமிக்கும் கலனாக மாறியுள்ளது. தாலுகா அலுவலகம், பள்ளிகள், வேளாண் துறை, மின் வாரியம் என அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு சிதைந்துள்ளது. அரசு துறை அலுவலகங்களில், முதலில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை புதுப்பித்து, மக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

மூலக்கதை