வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை; மிரட்டும் குடிநீர் பற்றாக்குறை

தினமலர்  தினமலர்
வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை; மிரட்டும் குடிநீர் பற்றாக்குறை

மதுரை : வைகை அணைக்கு நீர்வரத்து நின்றதால் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.மாநகராட்சிக்கு வைகை அணை-1, -2 திட்டங்கள், ஆற்றுப்படுகை உறை கிணறுகள், காவிரி கூட்டு திட்டம் மற்றும் போர்வெல்கள் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. தினமும் 175 எம்.எல்.டி., வரை கிடைத்தது.

மழை பொய்த்ததால் நீராதாரங்கள் வறண்டு 45 எம்.எல்.டி., வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளையில் சிக்கல் நீடிக்கிறது. மாநகராட்சியை காப்பாற்றிய வைகை அணையும் விரைவில் கைவிடும் சூழல் உள்ளது. அணையில் தற்போது 31.76 அடி நீர் உள்ளது. கொள்ளளவை பொறுத்தவரை 444 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து நின்றுவிட்டது. அணையில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் விரைவில் அணை வறண்டு விடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

ஆகஸ்ட் இறுதியில் மதுரையில் குடிநீர் பஞ்சம் அபாயம் உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகரில் மக்கள் தொகை தற்போது 16 லட்சம். இவர்களுக்கு தினமும் வழங்க 216 எம்.எல்.டி., குடிநீர் தேவை. தற்போது 138.09 எம்.எல்.டி., கிடைக்கிறது. இதன் மூலம் இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அணையில் தற்போதுள்ள தண்ணீரை கொண்டு செப்., 15 வரை குடிநீர் வழங்கலாம். அதற்குள் தென் மேற்கு பருவமழை மூலம் அணை நீர்மட்டம் உயரும் என நம்புகிறோம் என்றனர்.

மூலக்கதை