நாக்பூரை சேர்ந்த மருந்து ஏற்றுமதியாளரை பொறிவைத்து பிடித்த செக் குடியரசு FBI

தினகரன்  தினகரன்
நாக்பூரை சேர்ந்த மருந்து ஏற்றுமதியாளரை பொறிவைத்து பிடித்த செக் குடியரசு FBI

பிரேக்: மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்க வேண்டிய கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை  அமெரிக்காவில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ததாக நாக்பூரை சேர்ந்த மருந்து ஏற்றுமதியாளர் ஒருவரை செக் குடியரசு நாட்டின் எஃப்.பி.ஐ  பொறி வைத்து பிடித்துள்ளது. மயக்க மற்றும் தூக்க மருந்துகள், பாலுறவு ஊக்க மருந்துகள்,  வலி நிவாரணி போன்றவை அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் ஆகும். அந்த வகையில் Tapentadol, Modafilin, Tramadol, Carisopodrol போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்பேரிலேயே விற்க வேண்டும்.ஆனால் இத்தகைய மருந்துகள் அமெரிக்காவில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு, இந்தியாவில் இருந்து சப்ளை செய்யப்படுவதை எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. நாக்பூரை சேர்ந்த ஜிதேந்திர பிலானி என்பவர் நடத்தி வரும், LeeHPL ventures நிறுவனம் அனுப்பிய மருந்துகளை அமெரிக்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை நடத்தி உள்ளனர். அங்கீகாரம் பெறாத இம்மருந்துகளை, 2015 ஏப்ரல் முதல் மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி செய்ததாக பென்சில்வேணியா மாவட்ட நீதிமன்றம் ஜிதேந்திர பிலானிக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த நிறுவன வாடிக்கையாளர் போல அணுகி பெருமளவிலான மருந்துகளை வாங்கி  வர்த்தகம் செய்வது குறித்து பேசுவதற்காக செக் குடியரசின் பிரேக் ( Prague) நகருக்கு தந்திரமாக ஜிதேந்திர பிலானியை வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து தான் அவரை செக் குடியரசு போலீசார் உதவியுடன் எஃப்.பி.ஐ அதிகாரிகள் கடந்த 3 ம் தேதி கைது செய்து இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டவை அல்ல என்றும் மருத்துவர் பரிந்துரையின் கீழ் விற்கப்படுபவை என்றும் ஜிதேந்திர பிலானி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே அவரை நாடு கடத்த தேவையான ஆவணங்கள் 40 நாளில் தாக்கல் செய்யுமாறு எஃப்.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ள பிரேக் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே நாக்பூரைச் சேர்ந்த மருந்து வர்த்தகர்கள் சிலர் இமாச்சலப் பிரதேசம், சென்னை போன்ற இடங்களில் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதே இதற்க்கு காரணம் என்றும் மருந்தக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜிதேந்திர பிலானியைப் போல மேலும் பலரும் எஃப்.பி.ஐ. கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை