'கதாநாயகன் மோடி': அமைச்சர் சாரங்கியின் அதிரடி பேச்சு

தினமலர்  தினமலர்
கதாநாயகன் மோடி: அமைச்சர் சாரங்கியின் அதிரடி பேச்சு

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, பிரதமர் மோடி உருவானார் என பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய இணையமைச்சருமான, பிரதாப் சாரங்கி பேசினார்.


லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை துவக்கி வைத்து, ஹிந்தி, சமஸ்கிருதம், ஒரியா, ஆங்கிலம், பெங்காலி மொழிகளில், அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் பாலகோட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது நம் விமானப்படை தாக்குதல் நடத்தியதற்க்கு ஆதாரம் கேட்டவர்களின் செயல், தாயின், டி.என்.ஏ., மூலக்கூறுக்கு ஆதாரம் கேட்பது போன்றது. 'வந்தே மாதரம்' என, சொல்ல தயங்குபவர்கள், இந்த நாட்டில் வசிக்க தகுதியற்றவர்கள்.


எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, பிரதமர் மோடி உருவானார்.அவரின் ஆட்சியால், வெளிநாடுகளில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. பாலகோட் தாக்குதலை நடத்த முடிகிறது. பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட, 'விங் கமாண்டர்' அபிநந்தனை உடனடியாக விடுவிக்க முடிகிறது. இந்த அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். இல்லையேல், மக்கள் என்ன செய்வர் என்பது தான் தெரியுமே!


முன்னர் செய்த ஒரு தவறால், இந்த நாடு பிளவுபட்டது. அந்த தவறு, இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அவரின் பேச்சை, பிரதமர் மோடி, சிறிது நேரம் ரசித்து கேட்டார்.

மூலக்கதை