மக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி

தினகரன்  தினகரன்
மக்களவையில் அதிர் ரஞ்சன் பேச்சு: பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வி

புதுடெல்லி: ‘‘பிரதமர் மோடி மிகப்பெரிய வியாபாரி என்பதால், பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேர்தலில், பொருளை விற்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது’’ என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று நடந்த போது மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று பேசியதாவது: நமது பிரதமர் மிகப் பெரிய வியாபாரி. ஆனால் எங்களால் பொருளை விற்க முடியவில்லை. அதனால் நாங்கள் தேர்தலில் தோல்வியடைந்தோம். மோடியை புகழ்வதில் மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி வரம்பு மீறிவிட்டார். (அப்போது ஆளும் கட்சி எம்.பி.க்கள், ‘இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா’ என இந்திரா காலத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டதை எழுப்பியதை ஞாபகப்படுத்தினர்). எங்கள் கட்சி ஜனாதிபதியை விமர்சிக்கவில்லை. பல விஷயங்களில் தோல்வியடைந்ததற்காக மத்திய அரசை திட்ட விரும்புகிறோம். நாடு கடும் வறட்சியில் உள்ளது. அதுபற்றி அரசு கவலைப்படவில்லை. மக்களின் துயரத்தை போக்க பா.ஜ எம்.பிக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லாவற்றையும் மோடி செய்வார் என அவர்கள் நினைக்கின்றனர். மோடியை புகழ்ந்தாலே போதும் என அவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு புகழ்ந்தால், அவர்களை மோடி பார்த்துக் கொள்வார். புகழ்ச்சிக்கு மயங்குவதாக மத்திய அரசு உள்ளது. பல கட்டுமான திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. முக்கிய பொது துறை நிறுவனங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை. மக்கள் பயன்பெறுவதற்காக காங்கிரஸ் தொடங்கிய பல திட்டங்களை பா.ஜ அரசு பெயர் மாற்றிவிட்டது. அலைக்கற்றை மற்றும் நிலக்கர சுரங்க ஒதுக்கீட்டில், ஏதாவது முறைகேடு நடந்திருந்தால், ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏன் சிறையில் இல்லை? அவர்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்? பாகிஸ்தான் போர் விமானங்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அவற்றை விரட்டியடித்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்கப்பட வேண்டும். அவர் வைத்திருந்த மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவர் பேசும்போது தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சைக்குறிய வகையில் இருந்ததால், அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

மூலக்கதை