கோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க!

தினமலர்  தினமலர்
கோவில் நிலத்தையும் சோலையாக்க மரக்கன்று நடுவோம் வாங்க!

கோவை:பயன்படுத்தப்படாமல் இருக்கும் கோவில் நிலங்கள் உட்பட, அனைத்து பகுதிகளிலும் மரக்கன்று நடுவதற்கு, தேவையான அனுமதி பெற்றுத்தருவதாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினரிடம் கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
கோவையில், சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக, அவிநாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சிறுவாணி சாலை, மருதமலை சாலை என, மாவட்டத்தின் அனைத்து பிரதான சாலைகளிலும், பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.50 முதல், 100 ஆண்டுகள் வரை வளர்ந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதால், இயற்கை சமநிலையில் மிக மோசமான மாற்றங்கள்நிகழ்கின்றன.
'கோவையில் சில ஆண்டுகளாகவே மழைப்பொழிவு குறைந்து வருவதற்கு, மரங்கள் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டதும் ஒரு காரணம்' என்று, சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவேதான், மரக்கன்றுகளை அதிக எண்ணிக்கையில் நட்டு பராமரிக்கும் நோக்கத்துடன், தொழில் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளன.
கலெக்டர் உதவி என உறுதி இதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், கலெக்டர் இதை வாக்குறுதி அளித்துள்ளார்.இது குறித்து, கவுசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: இயற்கை சூழலை மேம்படுத்த, மரக்கன்றுகளை அதிகம் நட்டு பராமரிக்க வேண்டும்.இதற்கு போதிய நிலம் இல்லாதது பிரச்னையாக உள்ளது.எனவே, பயன்பாடின்றி இருக்கும் கோவில் நிலங்களில், மரக்கன்று வளர்ப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று, மாவட்ட கலெக்டரிடம் கேட்டோம்.
அறநிலையத்துறை அனுமதி தரணும்இத்தகைய நிலங்களில், போர்வெல் அமைப்பது, மரக்கன்று நடுவது, சொட்டு நீர் பாசனம் செய்வது, வேலி அமைப்பது போன்ற பணிகளை, சி.எஸ்.ஆர்., நிதியில் செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், அரசு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும்.இப்படி பணி மேற்கொண்டால், மாவட்டத்தின் இயற்கை சூழல் மேம்படும். கோவில் நிலங்களை நல்ல முறையில் பயன்படுத்தியது போலவும் இருக்கும். மாவட்ட கலெக்டர், அறநிலையத்துறையில் பேசி, முறைப்படி அனுமதி பெற்றுத்தருவதாக உறுதி கூறியுள்ளார். இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.
இதுவே முதல் முறை!கலெக்டர் ராஜாமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற, 'ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், ''கோவை மாவட்டத்தில், பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுள்ள, அனைத்து தொண்டு நிறுவனங்களையும் கலெக்டர் அழைத்துப்பேசியது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய கூட்டம் நடத்தப்படுவது, இதுவே முதல் முறை.ராக் அமைப்பு சார்பில், கோவை மாநகரில் போக்குவரத்து பிரச்னைக்கு குறைந்த செலவில் தீர்வு காண்பது பற்றிய வழிமுறைகளை தெரிவித்தோம். அவற்றை கேட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.

மூலக்கதை