பலசரக்கு கடை, உணவகங்கள் திறக்க விதிமுறைகள் தளர்கிறது: மத்திய அரசு நடவடிக்கை

தினகரன்  தினகரன்
பலசரக்கு கடை, உணவகங்கள் திறக்க விதிமுறைகள் தளர்கிறது: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: பலசரக்கு கடைகள், உணவகங்கள் திறப்பதற்கு தற்போது உள்ள விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பலசரக்கு கடை துவங்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி பதிவு முதல் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உரிமம், எடைகள் மற்றும அளவீடுகள் துறையின் அனுமதி உள்பட 28 அனுமதி சான்றிதழ்கள் பெற வேண்டும். இதேபோல், தாபா அல்லது உணவகம் திறக்க வேண்டும் என்றால் இதுபோன்று தீயணைப்புத் துறையின் இருந்து தடையில்லா சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி சான்றிதழ் இசை பாடல்கள் ஒலிபரப்ப உரிமம், உணவு ஒழுங்குபடுத்தும் துறையின் அனுமதி உள்பட 17 துறைகளின் அனுமதி சான்றிதழ்கள் பெற வேண்டும். இது நகரத்திற்கு நகரம் மாறுபடும். இந்த அனுமதிகளைப்பெற்று தொழில் தொடங்க வேண்டும் என்றால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  இதற்கு மாறாக, சீனா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில்  உணவகம் திறக்க வேண்டும் என்றால், 4 அனுமதி சான்றிதழ்கள் போதும். இதைத் கருத்தில் கொண்டு, தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் தொழில் தொடங்க அனுமதிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் (என்ஆர்ஏஐ) தெரிவிக்கையில், உணவகங்கள் திறப்பதற்கு தற்போதைய சட்டத்தில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. இதனால், தொழில் தொடங்கி நடத்த பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. உணவகம் திறக்க வேண்டும் என்றால் 24 துறைகளின் சான்றிதழ்களை வாங்கி  சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதேவேளையில், ஆயுதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு 13 துறைகளின் சான்றிதழ்கள் பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது என்றனர். இந்த கடுமையான சட்டவிதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பலசரக்கு கடைகள், உணவகங்கள் திறப்பதற்கு முன்பு பல்வேறு துறைகளின் அனுமதியை பெற வேண்டும் என்பது உண்மையே. தொழில் தொடங்குவதற்கு வசதியாக இந்த விதிமுறைகளை தளர்த்த அரசு முன்வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.* மளிகைக் கடைகள் வைக்க ஜிஎஸ்டி பதிவு, லைசென்ஸ், என 28 அனுமதி சான்றிதழ்களை பெற வேண்டியுள்ளது. இதுபோல் உணவகம் திறக்க 17 அனுமதி சான்று தேவை.* மாநிலத்துக்கு மாநிலம் துறை வாரியாக அனுமதி சான்று வாங்கும் நடைமுறை, எண்ணிக்கை மாறுபடும். * ரெஸ்டாரண்ட் வைக்க 24 ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், ஆயுத கொள்முதலுக்கு 13 ஆவணங்களே போதும்.* சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் உணவகம், கடைகள் திறக்க 4 சான்று போதுமானது.

மூலக்கதை