மோடிக்கு எதிராக சாட்சி கூறிய ஐபிஎஸ் அதிகாரிக்கு 30 ஆண்டு பழைய வழக்கில் ஆயுள் சிறை

தினகரன்  தினகரன்
மோடிக்கு எதிராக சாட்சி கூறிய ஐபிஎஸ் அதிகாரிக்கு 30 ஆண்டு பழைய வழக்கில் ஆயுள் சிறை

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக புகார் கூறியதால் ஐ.பி.எஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட, சஞ்சீவ் பட்டுக்கு 30 ஆண்டு பழைய வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் சஞ்சீவ் பட். அம்மாநிலத்தில் கடந்த 2002ல் நடந்த கலவரத்தின்போது, அதை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூறியதாக சஞ்சீவ் பட் புகார் தெரிவித்தார். அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை அவர், குஜராத் கலவரம் குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் நானாவதி கமிஷனில் வாக்குமூலமாகவே அளித்தார். உச்ச நீதிமன்றத்திலும் மோடிக்கு எதிராகவே அவர் பதில் மனுவை தாக்கல் செய்தார். இதனால் கடந்த 2015ல் ஐ.பி.எஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து பாஜ.வையும் மோடியையும் விமர்சித்து வந்தார்.இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன் ஜாம்நகர் கூடுதல் சூப்பிரண்டாக சஞ்சீவ் பட் பணியாற்றியபோது, ஒரு கைதி நீதிமன்ற காவலில் மரணமடைந்தது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. திடீரென இந்த புகார் மீது துரிதகதியில் விசாரணை தொடங்கப்பட்டது. இதில் சஞ்சீவ் பட் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஜாம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சஞ்சீட் பட்டுடன் பிரவீன் சிங் ஜாஹேலே என்ற அதிகாரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை