பணம் இல்லாமலேயே காசோலை கொடுத்துள்ளார் தேர்தல் செலவு கடனை தராமல் மநீம வேட்பாளர் தலைமறைவு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணம் இல்லாமலேயே காசோலை கொடுத்துள்ளார் தேர்தல் செலவு கடனை தராமல் மநீம வேட்பாளர் தலைமறைவு?

தஞ்சை : தேர்தல் செலவு கடனை தராமல் தஞ்சை மநீம வேட்பாளர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட்டது.

தஞ்சை மக்களவை தொகுதி மநீம வேட்பாளராக சம்பத் ராமதாஸ் என்பவர் போட்டியிட்டார். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்.

தஞ்சையில் போட்டியிட்ட இவர் தஞ்சையில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணி செய்து வந்தார். தேர்தலுக்காக இவர் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார்.

பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தார்.
தஞ்சை, பட்டுக்கோட்டை நகரங்களில் உள்ள பல அச்சகம், பிளக்ஸ் நிறுவனங்கள் மூலம் இவற்றை அவர் உருவாக்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடியும் வரை இவர் சில நிர்வாகிகளுடன் இங்கு முகாமிட்டிருந்த வகையில் ஓட்டல் மற்றும் ஒலிபெருக்கி, வேன் மற்றும் அச்சகம் என பல இடங்களில் பணம் தருவதாக கூறி இந்த பணிகளை செய்திருந்தார்.

தேர்தல் முடிந்ததும் அவர் பலருக்கு காசோலைகள் கொடுத்து உள்ளார்.

அந்த காசோலைகளில் பெரும்பாலானவை பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாம். 5 லட்சத்துக்கு மேல் இப்படி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் சம்பத் ராமதாசிடம் கேட்டு உள்ளனர். அவர் சில நாட்களில் தருகிறேன் என சாக்குபோக்கு சொன்னாராம்.

2 மாதம் ஆகியும் பணம் வந்து சேராததால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மூலம் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்ய ஊடக தொடர்பாளர் மகாலட்சுமி என்பவரிடம் புகார் செய்தார்களாம். இதற்கு அவர், எங்கள் கவனத்துக்கு இந்த புகார் வந்து உள்ளது.

விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினாராம். அதைத்தொடர்ந்து சிலர் தஞ்சை போலீசில் புகார் செய்து உள்ளனர்.

இதை அறிந்த வேட்பாளர் புகார் கொடுத்தவர்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்து செட்டில்மென்ட் செய்து புகாரை வாபஸ் வாங்க வைத்து விட்டார்.

பணம் கிடைக்காத மற்றவர்கள் இன்னும் ஒருவாரத்தில் பணம் வராவிட்டால் புகார் செய்வோம் என்று கூறுகிறார்கள்.
இதுகுறித்து சம்பத் ராமதாசிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை.

.

மூலக்கதை