நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு

டெல்லி: 17-வது நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதிவியேற்றார். தொடர்ந்து 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ம்  தேதி தொடங்கியது. அதில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை தொடர்ந்து பாஜ சார்பில் புதிய சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலம் கோடாப்பண்டி  தொகுதி எம்பி ஓம் பிர்லா (56) அறிவிக்கப்பட்டார். ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இது தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூஜனதா கட்சியும் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன.இந்த நிலையில் நேற்று சபாநாயகர் தேர்வு மக்களவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வேட்பாளராக யாரையும் நிறுத்தவில்லை. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 13 தீர்மானங்கள் அவையில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஓம் பிர்லா  குரல் ஓட்டு மூலம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் மோடி அழைத்து சென்று அமரவைத்தார்.  தொடர்ந்து பாஜ, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். அவரது உரையில், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி உரை முடிவடைந்ததும் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடங்கும். ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை