உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி

ஜெனீவா: உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்ற ஐ.நா வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பருவ மழை போதிய அளவுக்கு பெய்யாததால், கடும் வறட்சி  நிலவுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்ளிட்ட நகர் பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் ஓட்டல்கள், மேன்சன்கள், பெண்கள்-ஆண்கள் விடுதிகள் மூடப்பட்டு  வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லாமல் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் கழிவறைகளில் தண்ணீர் வராததால், துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இதனால் அவதிப்படுகிறார்கள்.  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறி விட்டனர். சில நிறுவனங்கள் ஊழியர்களை பெங்களூர், ஐதராபாத் என்ற வெளி மாநிலத்திற்கு அனுப்பி விட்டனர். சென்னை நகர் முழுவதும்  வீடுகளுக்கே கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, தண்ணீர் இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ. நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம்  தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், 4.2 பில்லியன் பேர், கை கழுவதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத்தை பேண  முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் 21 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 67.3 கோடி பேர் திறந்த வெளியில்  கழிவுகளை கழித்து வருவதாகவும், இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மூலக்கதை