'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி

தினமலர்  தினமலர்
நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ., குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி

புதுடில்லி: ஒரு பொது நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதே சிரமம் என்று கூறப்படும் நிலையில், 'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' என, பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும் எழுதி, அனைத்திலும் சாதனையுடன் தேர்ச்சி பெற்றுள்ளார், மாணவி, ஸ்துதி கந்த்வாலா.


உடம்பெல்லாம் மூளை என்று கூறும் அளவுக்கு, படிப்பில் மிகவும் கெட்டியானவர், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த, ஸ்துதி கந்த்வாலா. இவர் ராஜஸ்தானின் கோட்டாவில் பள்ளிப் படிப்பை படித்தார். அங்குள்ள தனியார் மையத்தில், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை பெற்றார். ராஜஸ்தான் மாநில கல்வி வாரியம் நடத்திய, பிளஸ் 2 தேர்வில் அவர், 98.8 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

ஆச்சர்யம்:


அதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில், தேசிய அளவில், 10வது இடத்தைப் பிடித்தார். மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், தேசிய அளவில், 71வது இடத்தைப் பிடித்தார். ஜிப்மர் பல்கலை நடத்திய, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில், தேசிய அளவில், 27வது இடம் பிடித்தார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஜே.இ.இ., எனப்படும், இன்ஜினியரிங் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில், தேசிய அளவில், 1086வது இடம் பிடித்தார்.

இவ்வாறு ஒரு நேரத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளது, ஆச்சரியமான விஷயம். இவ்வாறு ஒன்றுவிடாமல், அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்களுடன், தேசிய அளவிலும் சிறந்த இடம் பிடித்த மாணவி, ஸ்துதிக்கு, எந்தப் பல்கலையை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற, எம்.ஐ.டி.,எனப்படும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு ஆராய்ச்சி படிப்பை படிக்க உள்ளதாக, மாணவி ஸ்துதி கூறிஉள்ளார்.


கஷ்டம்:


இவருடைய பெற்றோர்கள் இருவரும், டாக்டர்கள். தந்தை, ஷீதல் கந்த்வாலா, சூரத்தில் மருத்துவராக உள்ளார். பல் மருத்துவரான தாய், ஹேதல், மகளுக்காக, கோட்டாவில் தங்கி உள்ளார். ''பாடத்தைப் புரிந்து படித்தேன். படித்ததை குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் பார்ப்பேன். படிப்பதை கஷ்டமாக உணர்ந்ததில்லை,'' என்பதுதான், மாணவி, ஸ்துதியின் வெற்றி ரகசியம்.

மூலக்கதை