உத்தரவு! கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்க ...கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு

தினமலர்  தினமலர்
உத்தரவு! கிராமங்களில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்க ...கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு

மதுரை, : மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை நிலவும் கிராம ஊராட்சிகளை கணக்கெடுத்து கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டுபிடித்து மேம்படுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்டு 1946 கிராமங்கள், குடியிருப்புகள் உள்ளன. சில ஆண்டுகளாக பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால் கடும் வறட்சி நிலவுகிறது. உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட சில ஒன்றியங்களிலுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை குறித்து கணக்கெடுத்து தேவையான நிதி ஒதுக்கி கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டறிந்து மேம்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் உத்தரவிட்டார். அதையடுத்து மதுரையில் கூடுதல் கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர். இதில் 141 கிராமங்களில் ஒரே நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது தெரிந்தது.

சில ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குடிநீர் பிரச்னையுள்ள கிராமங்கள், அங்குள்ள நீர் ஆதாரங்கள், கூடுதல் நீர் ஆதாரங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா, கூடுதல் தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல கிராம ஊராட்சிகளில் வைகை, காவிரி திட்டங்கள், உள்ளூர் போர்வெல்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் சில கிராம ஊராட்சிகளில் நீர் ஆதாரங்கள் முற்றிலும் வற்றியதால் குடிநீர் பிரச்னை உள்ளது.

அங்கு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் பெற ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்படும். தேவையான நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும், என்றார்.

மூலக்கதை