ஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு

தினகரன்  தினகரன்
ஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு தீவிரவாதிகள் குறி இந்தியாவுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை: பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசிய தகவல் வௌியீடு

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் அரிஹால் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஏர்போர்ட், ராணுவ பாதுகாப்பு மையங்களுக்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹால் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சக்திவாய்ந்த ஐஇடி. ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் அந்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. இதில், காயமடைந்த 9 ராணுவ வீரர்கள் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 2  வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேநேரத்தில் அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் புல்வாமா தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர். இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். முன்னதாக, அச்சாபல் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதிகாரி ஒருவரும் 2 வீரர்களும் காயமடைந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே மாவட்டத்தில் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப். படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தை குறிவைத்து அடுத்தடுத்த தொடர் தாக்குதல்கள் நடப்பதால், இந்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) சில ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், இத்தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்டதாகவும், அவற்றை அமெரிக்கா, இந்திய உளவுப்பிரிவு அமைப்புகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    மேலும், எஸ்சிஓ வெளியிட்ட தகவலில் இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் புல்வாமா தாக்குதலை போன்றே இந்த தாக்குதல்களும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை. உளவுத் தகவல்களின் அடிப்படையில், கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இதனை உறுதி செய்யும் வகையில் உள்ளன. அதனால், இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ராணுவ பாதுகாப்பு மையங்கள், வழிபாட்டு தலங்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு வசதி மற்றும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு உச்சபட்ச எச்சரிக்கையும் உளவுத் தகவல் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை