வருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க

தினகரன்  தினகரன்
வருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில்தான், வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து மோசடிகள் அரங்கேறுகின்றன. மோசடி பேர்வழிகள், வருமான வரித்துறையில் இருந்து வருவது போல் போலி எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்தால் உங்களது வங்கி கணக்கு, டெபிட்கார்டு விவரங்கள் கேட்கப்படலாம். இந்த மோசடி தகவல்கள் தொடர்பாக வருமான வரித்துறை ஏற்கெனவே எச்சரித்து வந்துள்ளது. இருப்பினும், போலி எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வருமான வரித்துறை அனுப்புவது போன்றே காணப்படுவதால், வரி செலுத்துவோர் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வருமான வரித்துறை ஒரு போதும் கிரெடிட், டெபிட் கார்டு, வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் அவற்றின் பின் நம்பர், பாஸ்வேர்டு போன்றவற்றை ஒரு போதும் கேட்பதில்லை.எனவே, இத்தகைய எஸ்எம்எஸ், இ-மெயில் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம். வருமான வரித்துறையில் இருந்து பேசுவதாக போன் அழைப்புகள் வந்தாலும் ஏமாற வேண்டாம். டெபிட் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் எதையும் வழங்க வேண்டாம். இல்லாவிட்டால் உங்களது வங்கி விவரங்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவார்கள்  என எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான வரி ரீபண்ட் வழங்குவதாக உறுதி அளிக்கும் போலி இ-மெயில்கள், வருமான வரித்துறையின் இ-மெயில் போன்றே சில மாற்றங்களுடன் இருக்கும். வங்கி இணையதள முகவரி போல சில போலி இமெயில் வருகின்றன.  உதாரணமாக, www.onlinesbi.com என்பது sbionline.com or onlinesbi.co.in என்பது போல் மாற்றப்பட்டிருக்கும். தோற்றத்தில் வித்தியாசம் தெரியாது. இத்தகைய எஸ்எம்எஸ், இ-மெயில் ஏதேனும் வந்தால் உடனடியாக [email protected] என்ற வருமான வரித்துறை இணையதள இமெயில் முகவரி மற்றும் [email protected] முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை