உலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி

தினகரன்  தினகரன்
உலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி

புதுடெல்லி: உலக பணக்காரர்களில் இருந்த அனில் அம்பானி, இன்று கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு வந்து விட்டார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது சொத்து மதிப்பு 4,200 கோடி டாலர் (சுமார் ரூ2.9 லட்சம் கோடி). 2007ல் 1,820 கோடி டாலராக (சுமார் ரூ1.27 லட்சம் கோடி) இருந்த சொத்து மதிப்பு, ஒரே ஆண்டில் 2 மடங்குக்கு மேல் போய்விட்டது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ப்ரா ஸ்டிரக்சர், ரிலையன்ஸ் நாவல் அண்ட் இன்ஜினியரிங், ரிலையன்ஸ் பவர், ரிலைன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளன. இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனில் மூழ்கியது அனில் அம்பானிக்கு பேரிடியாக அமைந்து விட்டது.இந்த நிறுவனத்தில் அனில் அம்பானி 60 சதவீத பங்குகளை வைத்திருந்தார். தற்போது திவால் நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் ஏற்பட்ட கடன் சுமை சுமார் ரூ58,000 கோடி. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் அனில் அம்பானிக்கு 75 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன. இவற்றின் சொத்து மதிப்பு 77.3 கோடி டாலர் (சுமார் ரூ5,400 கோடி). போர்ப்ஸ் பத்திரிகை உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டபோது அனில் அம்பானி 6வது இடத்தில் இருந்தார். இவரது சகோதரர் முகேஷ் அம்பானி அப்போது 4,300 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 5ம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இந்த பத்திரிகையின் புள்ளி விவரப்படி அனில் அம்பானிக்கு சொத்து மதிப்பு 150 கோடி டாலர்தான். இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அனில் அம்பானி தொடர்ந்து நீடிப்பாரா என்பது சந்தேகம்தான்.

மூலக்கதை