அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம் 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், அதற்கான அதிகாரப்பூர்வ பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்\' என்ற வாக்குறுதியுடன் அவர் இப்பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். அதன்படி, அடுத்த ஆண்டு நவம்பர் 3ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.  அண்மையில், 2ம் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், புளோரிடா மாகாணம் அர்லாண்டோவில் டிரம்ப் தனது இரண்டாவது இன்னிங்ஸ் பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியரசுக் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். டிரம்ப்பை பார்த்த அவர்கள் உற்சாக மிகுதியுடன் இன்னும் 4 ஆண்டுகள்\' என்று முழக்கமிட்டனர். இதையடுத்து அமெரிக்காவை சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம்\' என்ற முழக்கத்துடன் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்ற வெற்றி அமெரிக்க வரலாற்றின் மிக முக்கியமான தருணம். அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற கொள்கையை வரையறுத்த நாம் அதனை நடைமுறை படுத்தினோம். குடியேற்ற கொள்கைகள், பாதுகாப்பு செலவினங்கள் ஆகிய விவகாரங்களில் சொன்னதை செய்தோம். எனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் தொடர்ந்து உயரே சென்று கொண்டே இருப்போம். தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்து மேலும் பல வெற்றிகளை பெறுவோம். உலக நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுகின்றன. அமெரிக்கா ஒருபோதும் சோசலிச நாடாக மாறாது. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதால் ஊடுருவல் குறைந்துள்ளது.  இவ்வாறு டிரம்ப் பேசினார்.

மூலக்கதை