நேற்றிரவு, இன்று அதிகாலை பயங்கரம் நிலநடுக்கத்தால் சீனாவில் 11 பேர் பலி: அந்தமானில் 4.9 ரிக்டர் அலகு பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேற்றிரவு, இன்று அதிகாலை பயங்கரம் நிலநடுக்கத்தால் சீனாவில் 11 பேர் பலி: அந்தமானில் 4.9 ரிக்டர் அலகு பதிவு

வாஷிங்டன்: நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சீனாவில் 11 பேர் பலியான நிலையில், 122 பேர் படுகாயமடைந்தனர். அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், 4. 9 ரிக்டர் அலகு பதிவாகி உள்ளது. அந்தமான்- நிகோபார் தீவுகளில் இன்று (ஜூன் 18) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4. 9 அலகுகளாக பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘அந்தமான் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கி. மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

அந்தமானில் இன்று அதிகாலை 3. 49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4. 9 அலகுகளாக பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.



அந்தமான்-நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பானது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி அந்தமான் - நிகோபார் தீவுகளில் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், எவ்வித பாதிப்பும் அந்தமானில் ஏற்படவில்லை.



இந்நிலையில், சீனாவில் தென்மேற்கிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் நடந்த நிலநடுக்கத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமுற்றனர்.

இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இது, ரிக்டர் அளவுகோளில் 6 அலகு நிலநடுக்கம் என்றும், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் நேர்ந்ததாகவும், 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையங்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் நடந்த முக்கால் மணி நேரத்தில், குறைந்தது 4 முறை நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த ஓட்டல் ஒன்று இடிந்து விழுந்தது.

ஆனால், அதில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. அப்பகுதியில் சில வீடுகள் இடிந்தன.

நெடுஞ்சாலைகள் சிலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

.

மூலக்கதை