மேற்குவங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்,..நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்குவங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்,..நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்

கொல்கத்தா: மேற்குவங்க ஜூனியர் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, நாடு முழுவதும் 3. 5 லட்சம் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன், இன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் என். ஆர். எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 10ம் தேதியன்று உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்றுவந்த முகமது சயீத் (80) என்பவர் உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறிய முகமது சயீத் உறவினர்கள், ஜூனியர் டாக்டர்கள் இருவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த டாக்டர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விவகாரத்தால், அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்தது. தாக்குதலுக்கு ஆளான மருத்துவர்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்கள் போராட்ட களத்தில் குதித்ததோடு, பணிகளை செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், அரசு மருத்துவமனைகள் மற்றுமின்றி சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்னையை தீர்க்க, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவின்பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த மருத்துவர்கள் சங்கத்துக்கு அழைப்பு விடப்பட்டது.
ஆனால் அவர்கள், மம்தா பானர்ஜியின் அழைப்பினை ஏற்கவில்லை.

மேலும் இன்று (ஜூன் 17) நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பும் விடுத்தனர்.

முன்னதாக கடந்த சில நாட்களாகவே மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

டாக்டர்கள் போராட்டத்தால் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்காததால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘‘புற நோயாளிகள் பிரிவு இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இயங்காது; உடனடியாக மருத்துவர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவினை மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.   முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று மருத்துவர்களிடம் சமாதானம் பேசச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘நான்கு மணி நேரத்தில் வேலைக்கு திரும்பவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’’ என்று அறிவித்தத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

மருத்துவர்கள் விவகாரத்தால் மேற்குவங்கத்தில் ெதாடர்ந்து பதற்றமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் இன்று பணிக்கு வராததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.



இந்திய மருத்துவ கழகம் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. வழக்கம் போல் மருத்துவமனை இயங்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை மருத்துவர்கள் சங்கத்தினர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனார்.

கடந்த 7 நாட்களாக நடக்கும் இப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.   ஆனால், ‘இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 3. 5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்பார்கள்; அவசர சிகிச்சை, விபத்து பிரிவுகள் தவிர மற்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் 24 மணி நேர போராட்டத்தில் பங்கேற்பர்’ என்று இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.

.

மூலக்கதை