மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் ஸ்டிரைக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் ஸ்டிரைக்

சென்னை: நாடு தழுவிய அளவில் நடைபெறும் டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்திலும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இறந்தார். இதை கண்டித்து நோயாளிகளின் உறவினர்களால், இரண்டு பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்து, அந்த மாநிலத்தில் உள்ள டாக்டர்கள், ஸ்டிரைக்கில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துமவனைகளில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து, ஸ்டிரைக்கை வாபஸ்பெற்றுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். ஆனால் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அம்மாநில டாக்டர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர்களுக்கான பணி பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தியும், டாக்டர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் அரசு டாக்டர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் முறைப்படி ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டம் உறுதியாகியுள்ளது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் சங்கங்களும் ஆதரவாக களத்தில் குதித்துள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு பணிக்கு வந்த டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பணிகளை புறக்கணித்து மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

அதற்காக நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் காலை முதல் வெளி நோயாளிகள் சிகிச்சைகளை புறக்கணித்தனர்.

எமர்ஜென்சி சிகிச்சைகள் மட்டுமே எடுத்து கொள்வதாக தெரிவித்தனர். இருந்தாலும் டாக்டர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததோடு, மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்த டாக்டர்கள் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேர ஸ்டிரைக் தொடங்கியது அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்கின்றனர். மதுரை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அனுமதி உண்டு. இதனால் பெரும் கூட்டம் கூடியது.

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலுரில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் உள்ளனர். திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்கின. அறுவை சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கவில்லை.

வெளிமாவட்டங்கள், ஆந்திராவில் இருந்து வரும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகியது.

சிகிச்சைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இதற்காக இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அதே நேரம் எமர்ஜென்சி மருத்துவ சிகிச்சைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம்.

அதற்கான சேவை தொடரும்.

பொதுவாக சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும்’’ என கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை