அதிகாரிகள் மெத்தனம்; போட்டியை சமாளிக்க முடியாததால் கோ-ஆப்டெக்சுக்கு ரூ.40 கோடி இழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிகாரிகள் மெத்தனம்; போட்டியை சமாளிக்க முடியாததால் கோஆப்டெக்சுக்கு ரூ.40 கோடி இழப்பு

சென்னை: விற்பனையை பெருக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் கோ-ஆப்டெக்சில் 175 விற்பனை நிலையம், 8 ஒப்பந்த விற்பனை நிலையம், 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன.

இதில், விற்பனை நிலையங்கள் மூலம் பட்டு சேலைகள், வேட்டிகள், திரைசீலைகள், போர்வை, பெட் ஷீட், லுங்கி, சுடிதார், நைட்டி, ரெடிமேட் சட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 30 சதவீத தள்ளுபடியும், மற்ற நாட்களில் 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

அவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் விற்பனையை அதிகரிக்க முடியவில்லை.

இதையடுத்து, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நவீனப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும், தனியாருக்கு நிகராக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் போட்டிப் போட முடியவில்லை.

இதனால், கோ-ஆப்டெக்ஸ் சார்பில் வருவாயை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படாததும் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை பெருக்கும் வகையில் நிர்வாகம் சார்பில் உரிய விளம்பரம் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

இதனால், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு இலக்கு நிர்ணயித்தும் அதை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் இலக்கு வைத்தும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்தால் அடைய முடியவில்லை.

குறிப்பாக, 2016-17ல் ரூ. 7 கோடி நஷ்டம், 2017-18ல் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக கடந்த 2018-19ல் ரூ. 40 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு ரூ. 40 கோடி பாக்கி

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறுகையில்,’கோ-ஆப்டெக்ஸ் பொருட்களை கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது அந்த மாதிரி செய்யவில்லை. அதேபோன்று கஜா புயல் பாதிப்பின் போது தனியாரிடம் இருந்து போர்வை வாங்கப்பட்டது.

ஆனால் அதை கோ-ஆப்டெக்சில் கொள்முதல் செய்திருந்தால் ஓரளவுக்கு விற்பனை இழப்பு ஏற்படுவதை தவிர்த்து இருக்க முடியும்’ என்றனர்.

மேலும், தமிழக அரசிடம் இருந்து வர வேண்டிய தள்ளுபடி மானியம் ரூ. 20 கோடி, இலவச வேட்டி சேலை விநியோகத்திற்கு தமிழக அரசு தர வேண்டிய தொகை ரூ. 10 கோடி, கோவை டிஎன்சிடி மில் தர வேண்டியது ரூ. 2. 77 கோடி, நெசவாளர் சங்கம் தர வேண்டிய கடன் பாக்கி ரூ. 3 கோடி, இலவச வேட்டி சேலை நூல் தயாரிக்க முன்பணம் பெற்ற ஊத்தங்கரை நூற்பாலை, புதுக்கோட்டை நூற்பாலை தர வேண்டியது ரூ. 4. 50 கோடி என மொத்தம் ரூ. 40. 27 கோடியை தமிழக அரசு வட்டியுடன் வழங்க வேண்டியுள்ளது.

ஆனால், இதனை பற்றியெல்லாம் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கவலை இல்லை என்றனர்.

.

மூலக்கதை