தவறான மருத்துவ சிகிச்சையால் கோவை கல்லூரி மாணவி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தவறான மருத்துவ சிகிச்சையால் கோவை கல்லூரி மாணவி பலி

கோவை: சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோவை கல்லூரி மாணவி இன்று பலியானார். தவறான சிகிச்சை அளித்த சித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும், வழக்கு பதியாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை முன் மாணவியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த கோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன். இவரது மனைவி மல்லிகா.

இவர்களது மகள் சத்யப்பிரியா (20). கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வந்தார்.

இந்தநிலையில் வயிற்றுவலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்த சத்யப்பிரியா உறவினர்கள் அறிவுறுத்தலின் பேரில் கோவை செல்வபுரத்தில் உள்ள ஒரு சித்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தவறான மருந்துகள் வழங்கியதால் சத்யப்பிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

தவறான சிகிச்சை குறித்து கணேசன் மே 1ம் தேதி சித்த வைத்தியர் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்தனர்.

மேலும் ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சத்யப்ரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மே 31ம் தேதி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிசிச்சை பலனின்றி சத்யப்பிரியா அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து செல்வபுரம் சித்த வைத்தியரை கைது செய்ய வலியுறுத்தியும், செல்வபுரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை முன் சத்யப்ரியாவின் உறவினர்கள் இன்று காலை 10. 30 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

.

மூலக்கதை