தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

தினகரன்  தினகரன்
தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

லண்டன் : தசைப்பிடிப்பு காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், உலக கோப்பை தொடரின் அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,  50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியில் இமாம் உல் ஹாக், ஃபகர் ஜமான் களமிறங்கினர். இமாம் 7 ரன்னில் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆட்டத்தில் 5வது ஓவரை வீசி கொண்டிருந்த புவனேஸ்வர் குமாருக்கு தசைப்பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார். அவரது ஓவரில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீச விஜய் அழைக்கப்பட்டார். முதலுதவிக்கு பிறகு களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புவனேஸ்வர் குமார் பந்து வீச அழைக்கப்படவில்லை. இந்நிலையில் உலக கோப்பை தொடரின் அடுத்த 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி பங்கேற்பார் என இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். 

மூலக்கதை