அடுத்தப் பொங்கல்: விஜய்யுடன் மோதும் ரஜினி

தினமலர்  தினமலர்
அடுத்தப் பொங்கல்: விஜய்யுடன் மோதும் ரஜினி

நடிகர் விஜய் நடிக்கும் அவரின் 63வது படத்துக்கு தளபதி 63 என பெயர் சூட்டி உள்ளனர். அந்தப் பெயர், விரைவில் மாற்றப்பட்டுவிடும். இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, இயக்குநர் அட்லி இயக்குகிறார். மெர்சல் படத்துக்குப் பின், இருவரும் இணைந்து உருவாக்கும் படம் என்பதால், அந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது.

இந்தப் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதனால், அடுத்தப் படத்தில் தனது தீவிர கவனத்தைச் செலுத்தத் துவங்கி விட்டார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில்தான் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 64வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் படபிடிப்பு, வரும் செப்.,ரில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியிடப்படும் எனவும் கூறுகின்றனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படபிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் முடிவடையும் என்றும், 2020 பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக் குழு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இந்தாண்டு நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் படத்துடன் ரஜினி படம் மோதியது போல, அடுத்த பொங்கலுக்கு ரஜினி, விஜய் படத்துடன் மோதுவார் என கூறப்படுகிறது.

மூலக்கதை