தீவிர பாட்மிட்டன் ரசிகை நான்: டாப்சி

தினமலர்  தினமலர்
தீவிர பாட்மிட்டன் ரசிகை நான்: டாப்சி

கேம் ஓவர் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து, அற்புதமான நடிகை என பெயர் பெற்றிருக்கிறார் நடிகை டாப்சி. வை ராஜா வை படத்தில் நடித்த பின், அவர் பாலிவுட் பக்கம் போனவர் அங்கேயே செட்டில் ஆகி, தமிழ் படங்களில் நடிக்க வரவே இல்லை.

வெகு காலம் கழித்துத்தான், தமிழ் பட உலகை எட்டிப் பார்த்திருக்கிறார். பாட்மிண்டன் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் டாப்சி, அக்சஸ் பாட்மிண்ட்டன் என்ற டீமை வாங்கி நிர்வகித்து வருகிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்துத்தான், தமிழ் திரையுலகைத் தேர்வு செய்து நடிக்க வந்தேன். அதன் பின், பாலிவுட் பக்கம் சென்றேன். அங்கு, எனக்கு முழு நேரமும் நடிப்புக்கு வாய்ப்பு வந்ததால், அங்கேயே பிசியாகி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு தமிழ் படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு வந்தது. இந்தி படங்களுக்கு கொடுத்த கால்சீட்டே முடியாத போது, நேரமின்மையால் தமிழ் படங்கள் குறித்து அப்போது என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. நீண்ட காலம் கழித்து, கேம் ஓவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டேன். பிடித்துப் போனது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நடித்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து, நல்ல பட வாய்ப்புகள் வந்தால் தமிழில் நடிப்பேன்.

முன்பெல்லாம், கதை என்ன என்று பார்க்க மாட்டேன். பட வாய்ப்பு வந்தால் ஒப்புக் கொள்வேன். அதனாலேயே, நான் நடித்த படங்கள் பல தோல்வி அடைந்திருக்கின்றன. இப்போது அப்படியில்லை. எடுத்ததுமே, கதையைத்தான் கேட்கிறேன். கதை எனக்குப் பிடித்துப் போயிருந்து, அதில் எனக்கு வழங்க ஒப்புக் கொள்ளும் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே, படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இப்போது, படங்களும் வெற்றி பெறுகின்றன; நானும், புகழ் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கிறேன்.

எனக்கு விளையாட்டில் எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக பாட்மிட்டன் விளையாட்டு என்றால் அலாதி. இந்த வயதில் அந்த விளையாட்டைக் கற்றுக் கொண்டு, என்னால் விளையாட முடியாது. அதனால், ஒரு பாட்மிட்டன் டீமையே அப்படியே வாங்கி அதை நிர்வகிப்பது என முடிவெடுத்துத்தான் அக்சஸ் டீமை வாங்கி விட்டேன்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பாட்மிட்டன் விளையாட்டில் தகுதியும்; திறமையும் உள்ளவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களையெல்லம் ஊக்குவித்து, விளையாட்டையும், இந்திய வீரர்களையும் பெருமைபடுத்த வேண்டும். பாட்மிட்டன் விளையாட்டு எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். அந்த விளையாட்டின் தீவிர ரசிகை நான்.

இவ்வாறு நடிகை டாப்சி கூறியுள்ளார்.

மூலக்கதை