குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி

தினமலர்  தினமலர்
குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி

நீண்ட இடைவெளிக்குப் பின், கேம் ஓவர் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் நடிகை டாப்சி. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதில் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார் நடிகை டாப்சி.

படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக, பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர் கேம் ஓவர் படக் குழுவினர். அந்த சந்திப்பிற்கு வந்திருந்தார் நடிகை டாப்சி. அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டுப் பேசினார்.

அவர் பேசியதாவது:

தமிழ் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே ஆசை உண்டு. ஆனால், தொடர்ச்சியாக எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை; ஏன் என்று தெரியவில்லை. நடிகர்-நடிகையர், ஒரு படத்தின் அச்சாணி போன்றவர்கள். அவர்கள், இயக்குநர் கையில் இருக்கும் கருவிகள். ஒவ்வொரு படத்தையும் எப்படி உருவாக்க வேண்டும் என்பது இயக்குநர்கள் கையில் தான் உள்ளது. அதனால், நடிகர்-நடிகையர் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைக் கேட்டு அப்படியே நடித்துக் கொடுத்து விட வேண்டும். அதுதான், நடிகர்-நடிகையரின் ஒரே வேலையாக இருக்க வேண்டும்.

நீங்கள் ஏன், 100 கோடி ரூபாய்க்கு வசூலைக் குவிக்கும் படங்களில் நடிக்கவில்லை என கேட்கின்றனர். எனது படங்கள், அந்த அளவுக்கெல்லாம் வசூலை அள்ளிக் குவிக்க வேண்டியதில்லை. 50 கோடி ரூபாய் வசூலை அடைந்தாலே போதும். என்னைப் பொறுத்த வரையில், எனது ரசிகர்கள்தான் என்னுடைய எஜமானர்கள். அவர்கள் தான், ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 300 செலவு செய்து எனக்காக தியேட்டருக்கு வந்து, மூன்று மணி நேரத்தை செலவு செய்கின்றனர். அவர்களுக்காகத்தான் நான் படங்களில் நடிக்க வேண்டும்.

எனக்கு எப்போது திருமணம் என எல்லோரும் கேட்கின்றனர். திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது; உன்னதமானது. அந்த உறவுக்குள் போக வேண்டும் என்பது என்னுடைய எண்ணமும் கூட. ஆனால், அதற்கான கால கட்டம் இப்போது இல்லை என நினைக்கிறேன். குழந்தைகள் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈடுபாடும்; நாட்டமும் உண்டு.

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தேவை. எனக்கான அந்தத் தேவை அதிகரிக்கும்போதோ, அந்த எண்ணம் தீவிரமாக வலுக்கும்போதோ, நான் சட்டென திருமணம் வாழ்க்கைக்குள் போய் விடுவேன். நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன். அதற்கான நேரம் வரும்போது, எனக்கான ஒரு மனிதரை நான் விரைந்து தேர்வு செய்வேன்.

இவ்வாறு நடிகை டாப்சி கூறினார்.

மூலக்கதை