ஜேஇஇ தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்

தினகரன்  தினகரன்
ஜேஇஇ தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்

சென்னை: ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 30 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் உள்ள 10,500 இன்ஜினியரிங் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஜேஇஇ தேர்வை விட, நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கவே தமிழகத்தில் அதிக போட்டி நிலவுகிறது. அதனால் தமிழகத்தில் ஜேஇஇ தேர்வை விட நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல் ஜேஇஇ தேர்வில் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான இன்ஜினியரிங்கில் சேர இந்த ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் ேஜஇஇ (அட்வான்ஸ்ட்) நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 1,61,319 பேர் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வு எழுதிய நிலையில், அதில் 38,705 பேர் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்றவர்களில் 5,356 பேர் மாணவிகள், 15,566 பேர் பொதுப்பிரிவு மாணவர்கள், 3,636 பேர் பொதுப்பிரிவின்கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கோருபவர்கள், 8,758 பேர் எஸ்சி பிரிவு மாணவர்கள், 3,094 பேர் எஸ்டி பிரிவு மாணவர்கள். அதில் முதல் ஆயிரம் பேரில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் ஜேஇஇ தேர்வில், எந்த மண்டலத்திலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் முதல் 5 இடங்களில் வரவில்லை.  தமிழக அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் பிரஜித் அகில இந்திய அளவில் 33ம் இடம் பெற்றுள்ளார்.

மூலக்கதை