பி.எப்., தொகையை பெறுவோர் அதிகரிப்பு!

தினமலர்  தினமலர்
பி.எப்., தொகையை பெறுவோர் அதிகரிப்பு!

திருப்பூர்:ஆன்லைன் சேவைகள் மூலம், பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது; கோவை மண்டலத்தில், மே மாதம், 41 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.மத்திய தொழிலாளர் துறையின் கீழ், தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் (பி.எப்.,) செயல்படுத்தப்படுகிறது. தொழிலாளர் சம்பளத்தில் 12 சதவீதம்; நிறுவன பங்களிப்பு 12 சதவீதம், தொழிலாளரின் பி.எப்., கணக்கில் சேர்க்கப்படுகிறது.
வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, மருத்துவம், கல்வி, திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, தங்கள் பி.எப்., கணக்கில் உள்ள தொகையை தொழிலாளர்கள் பெறமுடியும். கடந்த காலங்களில், உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பணிபுரியும் நிறுவன உதவியுடன், பி.எப்., அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
இதனால், பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெறுவதை, தொழிலாளர்கள் சிக்கல் நிறைந்ததாக கருதினர். ஆன்-லைன் மயமாக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெறுவது எளிமையாகியுள்ளது. உமாங்க் ஆப் மூலம், மொபைல் போனிலேயே பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெற, விண்ணப்பிக்க முடியும்.நடைமுறைகள் எளிமையாகியுள்ளதையடுத்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெறும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கோவை பி.எப்., மண்டலம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஊட்டி, குன்னுார் பகுதிகளை உள்ளடக்கி இயங்குகிறது. கோவை மண்டலத்தில், கடந்த மே மாதம் மொத்தம் 44,400 பேர், பி.எப்., கணக்கிலிருந்து தொகை பெற விண்ணப்பித்துள்ளனர்.இவர்களில், 41 ஆயிரம் பேர், ஆன்லைன் சேவை வழியாக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3,400 பேர் மட்டுமே பழைய முறைப்படி,நேரில் விண்ணப்பித்துள்ளனர்.
பி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை மண்டலத்தில், பி.எப்., கணக்கிலிருந்து, பல்வேறு தேவைக்கு, ஆன்லைனில் தொகை கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 92 சதவீதம் பேர், ஆன்லைன் சேவைகளையே பயன்படுத்துகின்றனர்.அடுத்த சில மாதங்களில், நேரில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். அனைவரும், ஆன்லைன் சேவையை பயன்படுத்த துவங்கிவிடுவர்.
விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, பி.எப்., பயனாளர்களின் வங்கி கணக்கில் தொகை சேர்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், கோவை மண்டலத்தில், 18 ஆயிரம் பேருக்கு, வீடு கட்டுவதற்காக 290 கோடி ரூபாய்; கல்வி மற்றும் திருமண செலவுக்காக, 3,100 பேருக்கு, 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை