விடிவு காலம்! இனி, மகளிர் கோர்ட்டில் நீதி கிடைக்கும்: 2 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி நியமனம்

தினமலர்  தினமலர்
விடிவு காலம்! இனி, மகளிர் கோர்ட்டில் நீதி கிடைக்கும்: 2 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி நியமனம்

கோவை, ஜூன் 16-இரு ஆண்டுகளுக்கு பின், கோவை மகளிர் கோர்ட்டுக்கு நீதிபதி நியமிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கோவை மகளிர் கோர்ட்டில், வரதட்சணை கொடுமை, பெண் கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல், பாலியல் சித்ரவதை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட, பெண்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன
. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், பாதிக்கப்பட்ட வழக்குகள், மாஜிஸ்திரேட் கோர்ட்களில் விசாரிக்கப்பட்டன.பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்ததால், எதிரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது.
இவ்வழக்குகள் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.'போக்சோ' சட்டத்தில், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்; குற்றச்சாட்டு பதிவுக்கு பின், அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்தாதது; நீதிபதி பணியிடம் காலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன.
கோவையில் மகளிர் கோர்ட்டில் நீதிபதி மணிமொழி பணியாற்றியபோது, வழக்கு விசாரணை தொய்வின்றி நடந்தது. அவர், 2017, ஆகஸ்டில் லேபர் கோர்ட்டுக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின், மகளிர் கோர்ட்டுக்கு நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.
கடந்த இரு ஆண்டுகளாக, பொறுப்பு நீதிபதிகளே கூடுதலாக கவனித்து வந்தனர்.ஒரே நீதிபதி இரண்டு கோர்ட்டில் விசாரித்ததால், மகளிர் கோர்ட்டில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தது. 2017, அக்., வரை, 35 'போக்சோ' வழக்கு நிலுவையில் இருந்தன. தற்போது, 95 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மகளிர் கோர்ட்டில், மொத்தம், 135 வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
இரண்டு ஆண்டுக்கு பின், மகளிர் கோர்ட்டுக்கு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் ராதிகா, கோவை மகளிர் கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விரைந்து நீதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மூலக்கதை