வெயில் கொடுமையால் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
வெயில் கொடுமையால் உயிரிழப்பு

ஹூஸ்டன்:வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற குழுவில் இருந்த, இந்தியாவைச் சேர்ந்த, 7 வயது சிறுமி, வெயில் கொடுமையால் உயிரிழந்தார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக, அமெரிக்காவுக்குள் பலர் அத்துமீறியும், அகதிகளாகவும் நுழைந்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி, சில ஏஜன்டுகள், பணம் பெற்று, மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் விட்டு விடுகின்றனர். மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை, மோசமான நிலப்பரப்பு போன்றவற்றை கடந்து, பல கி.மீ., துாரம் நடந்து தான் அமெரிக்காவை அடைய முடியும்.இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த, ஐந்து பேர் குழு, சமீபத்தில், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது. மூன்று பெண்கள், 7 வயது சிறுமி மற்றும் ஒரு கைக் குழந்தை என, இவர்கள், எல்லைப் பகுதியில் நுழைவதற்காக காத்திருந்தனர்.இந்த நிலையில், தண்ணீர் எடுத்து வருவதற்காக, அந்த சிறுமியின் தாய் மற்றும் ஒரு பெண் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் நிலவியது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், தாகத்தால், அந்த, 7 வயது சிறுமி உயிரிழந்தார்; அவருடைய பெயர், குருபிரீத் கவுர் என, போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுமியுடன் வந்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சமீபத்தில் தான், இந்தப் பகுதியில், இந்தியர்கள் அடங்கிய குழு நுழைவது தடுக்கப்பட்ட சம்பவம் நடந்தது.மெக்சிகோ வழியாக, அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 2017ல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக, 3,100 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இது, 9,000மாக உயர்ந்தது.

மூலக்கதை