ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் இல்லாத உயர்வு

தினமலர்  தினமலர்
ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது.இது குறித்து, வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:



இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில், 3.93 சதவீதம் அதிகரித்துஉள்ளது. ஏற்றுமதி மதிப்பு, 30 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில், 2.09 லட்சம் கோடி ரூபாய்.மின்னணு பொருட்கள், ரசாயனம் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்தது, இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துஉள்ளது.



இறக்குமதி


இறக்குமதியைப் பொறுத்தவரை, கடந்த மே மாதத்தில், 4.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பின் காரணமாக, மே மாதத்தில், இந்தியாவின் இறக்குமதியானது, 45.35 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில், 3.16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, மே மாதத்தின், வர்த்தக பற்றாக்குறை, 15.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும்.



பற்றாக்குறை



கடந்த ஆண்டு, நவம்பர் மாதத்தில், வர்த்தக பற்றாக்குறையானது, 16.67 பில்லியன் டாலர் ஆக அதிகரித்திருந்தது.வர்த்தக பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும்.ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த மே மாதத்தில், மின்னணு துறையின் ஏற்றுமதி, 51 சதவீதமாகும். பொறியியல் துறை ஏற்றுமதி, 4.4 சதவீதமாகும். ரசாயனம் மற்றும் மருந்து துறையின் ஏற்றுமதி முறையே, 20.64 சதவீதம், 11 சதவீதமாகும்.தேயிலை துறையின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில், 24.3 சதவீதமாகும்.

சரிவு


அதேசமயம், வேறு சில துறை பொருட்களின் ஏற்றுமதி, சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்கள், கைகளால் தயாரிக்கப்பட்ட இழைகள், அரிசி, காபி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் இறக்குமதி, 8.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 86 ஆயிரத்து, 706 கோடி ரூபாயாகும்.கடந்த மே மாதத்தில், 33 ஆயிரத்து, 36 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, 37.43 சதவீதமாக அதிகரித்து உள்ளது.



மொத்தத்தில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்றுமதி, 2.37 சதவீதம் அதிகரித்து, 3.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை, 4.39 சதவீதம் அதிகரித்து, 6.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை, இம்மாதங்களில், 2.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை